/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் அரசு பெண்கள் கல்லுாரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது

ADDED : ஆக 14, 2025 11:31 PM

பரமக்குடி:பரமக்குடி அரசு பெண்கள் கல்லுாரியில் 2வது நாளாக நிரந்தர பேராசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2012ம் ஆண்டு பரமக்குடியில் அழகப்பா பல்கலை உறுப்பு கல்லுாரி துவங்கப்பட்டது. கல்லுாரியில் 2015 ஆக.,31ல் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.தொடர்ந்து 2022ல் அரசு கலை கல்லுாரியாக மாற்றப்பட்ட போது பணி மாறுதல் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். இதனால் பதவி உயர்வு, பங்களிப்பு ஊதியம் மற்றும் பல பண பலன்களில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் பல்கலையில் பணி வழங்க பல்கலை நிர்வாகம் மற்றும் உயர் கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று அழகப்பா பல்கலை நிர்வாகம் 2025 ஜூலை 11ல் மீண்டும் பல்கலையில் பணியமர்த்த உயர் கல்வி துறை செயலாளர், கல்லுாரி கல்வி ஆணையர் மற்றும் கல்லுாரிக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் பணி விடுவிப்பு ஆணை தற்போது வரை வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக கடந்த மாதம் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை கடிதங்களை பேராசிரியர்கள் வழங்கி உள்ளனர். தொடர்ந்து பணி விடுவிப்பு ஆணை வழங்காததையடுத்து ஆக.,13 மாலை முதல் இரவு வரை 5 பெண்கள் உட்பட 14 நிரந்தர பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்வர் வனஜா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இரவு 10:00 மணிக்கு கலைந்து சென்றனர்.
ஆனால் நேற்றும் பணியாணை வராத நிலையில் மதியம் 3:30 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். பணி உத்தரவு வரும் வரை போராட்டம் தொடரும் என பேராசிரியர்கள் தெரிவித்தனர்.