/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அருள் பெற ஆற்றுப்படுத்தும் திருமுருகாற்றுப்படை
/
அருள் பெற ஆற்றுப்படுத்தும் திருமுருகாற்றுப்படை
ADDED : ஜன 29, 2025 07:12 AM
மதுரை : ''பிற ஆற்றுப்படை நுால்கள் பொருளைப் பெற ஆற்றுப்படுத்தும் போது திருமுருகாற்றுப்படை இறைவன் அருள்பெற ஆற்றுப்படுத்துகிறது'' என மதுரை உலகத் தமிழ்ச் சங்க விழாவில் துாத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி கல்லுாரி பேராசிரியை (ஓய்வு) அனார்கலி தெரிவித்தார்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம், இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை நடத்திய விழாவில் உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் (பொறுப்பு) அவ்வை அருள் தலைமை வகித்தார். என்.எம்.ஆர். சுப்புராமன் கல்லுாரி துணை முதல்வர் மஹிமா முன்னிலை வகித்தார்.
பேராசிரியை அனார்கலி 'ஆற்றுப்படை - பயண இலக்கியம்'என்ற தலைப்பில் பேசியதாவது:
தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன்று ஆற்றுப்படை. ஆறு என்றால் பாதை, வழி என்று பொருள். படை என்றால் படுத்துவது, அனுப்பிவைப்பது. விறலியர், பாணர், கூத்தர் போன்றோர் வள்ளல்களை ஆடல், பாடல்களால் மகிழ்வித்துப் பொருள் பெறுவது சங்க காலத்தில் இருந்தது.
பரிசு பெற்று வரும் வழியில் இன்னும் பரிசு பெறாத கலைஞனை தனக்குப் பொருள் அளித்த வள்ளலிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்துவது மரபு. எல்லா ஆற்றுப்படை நுால்களும் மன்னர்கள், வள்ளல்களை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பொருளைப் பெற ஆற்றுப்படுத்துகிறது. திருமுருகாற்றுப்படையோ இறைவன் அருளைப் பெற ஆற்றுப்படுத்துகிறது.
கலைஞர்கள், கூத்தர்களை தமிழ்ச் சமூகம் ஆதரிக்கிறது. ஆற்றுப்படை இலக்கியங்கள் பயணத்தை மட்டும் சொல்லாமல் நமது பண்பாட்டையும் வாழ்வியலையும் சொல்லித் தரும் ஆவணமாக உள்ளது என்றார். காட்சிக்கூட விளக்குநர் புஷ்பநாச்சியார் ஒருங்கிணைத்தார்.