ஓட்டு எண்ணும் மையத்திற்கு துணை ராணுவத்துடன் மூன்றடுக்கு பாதுகாப்பு
ஓட்டு எண்ணும் மையத்திற்கு துணை ராணுவத்துடன் மூன்றடுக்கு பாதுகாப்பு
ADDED : ஏப் 24, 2026 06:01 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் மையத்திற்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்களுடன் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்துார் தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் முடிந்ததும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு அண்ணா பல்கலை கல்லுாரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு நேற்று காலை 4 தொகுதிகளுக்குட்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தனித்தனியாக பிரித்து பாதுகாப்பு அறைகளில் (ஸ்ட்ராங் ரூம்) வைக்கப்பட்டன. அனைத்து இயந்திரங்களையும் சரிபார்த்த பின் அறைகள் சீல் வைக்கப்பட்டன.
ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மே 4 வரை இயந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்படும். நேற்று காலை முதல் 300 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் அடுக்கு பிரிவான சீல் வைக்கப்பட்ட அறை முன்பு துணை ராணுவப் படையினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாக்கின்றனர்.
மற்ற இரு அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஆயுத படையினர், சட்டம் ஒழுங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பாதுகாப்பு அறை மற்றும் கட்டடத்தை சுற்றிலும் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் நிலைய கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ----
