/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.20,000 லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலர் கைது
/
ரூ.20,000 லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலர் கைது
ADDED : ஜன 24, 2025 01:41 AM

பரமக்குடி:பரமக்குடி நகராட்சியில் நகரமைப்பு அலுவலர், 20,000 ரூபாய் லஞ்சம் பெற்றதால், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நகராட்சி பதிவு பெற்ற இன்ஜினியர் ஒருவர், தன் வாடிக்கையாளருக்கு நான்கு மாடி வீடு கட்ட, கட்டட வரைபட அனுமதி கேட்டிருந்தார். இதற்கு கட்டணமாக நகராட்சிக்கு, 76,850 ரூபாய் செலுத்தினார்.
இதையடுத்து, பிளான் அப்ரூவல் கேட்டு, நகராட்சி நகரமைப்பு அலுவலர் பற்குணனிடம் சென்றார். அப்போது, பற்குணன் தனக்கு ஒரு வீட்டு மனைக்கு தலா, 5,000 வீதம் 20,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என, கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு, இன்ஜினியர் உடன்படாத நிலையில், அனுமதி தர முடியாது என, கண்டிப்புடன் தெரிவித்தார். ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் இன்ஜினியர் புகார் அளித்தார். பற்குணன் பணத்தை கூகுள் பேவில் கேட்டதால், லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின்படி, 20,000 ரூபாயை இன்ஜினியர் அனுப்பினார். நேற்று காலை பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் போலீசார், பற்குணனை கைது செய்தனர்.

