/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தி.மு.க., பொதுக்கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்
/
தி.மு.க., பொதுக்கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்
UPDATED : ஏப் 14, 2025 07:16 AM
ADDED : ஏப் 14, 2025 05:19 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்ற தி.மு.க., பொதுக் கூட்டத்திற்காக, குறுகலான மாற்று பாதையில், வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
ஆர்.எஸ்.மங்கலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில், வாரச்சந்தை நடைபெறுகிறது.
ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டிலிருந்து பரமக்குடி செல்லும் ரோட்டில் வார சந்தை அமைந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில், வாரச்சந்தை அமைந்துள்ள பரமக்குடி ரோடு, அண்ணா திடலில் தி.மு.க., பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க., பொதுக் கூட்டத்திற்காக பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள் மற்றும் அனைத்து வாகனங்களும், காந்தி வீதி வழியாக திருப்பி விடப்பட்டது. குறுகலான ரோடு பகுதி என்பதாலும், பஸ்களும், கனரக வாகனங்களும் ரோட்டில் வளைய முடியாமல், கடும் சிரமமடைந்தனர்.
மேலும் வாரச்சந்தை நாள் என்பதால் அதிகப்படியான வாகன போக்குவரத்து இருந்ததால், வாகனங்கள் நகர முடியாமல் ஆங்காங்கே ஸ்தம்பித்தன. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பல மணி நேரம் சிரமத்தை சந்தித்தனர்.
பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு போலீசார் வாகன போக்குவரத்தை சீர் செய்தனர்.
எனவே, நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் வாரச்சந்தை நாட்களில், பரமக்குடி ரோட்டில் பொது கூட்டங்கள் நடைபெற போலீசார் தடை விதிக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தினர்.

