/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சர்ச்சைக்கு பின் பாம்பன் பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்
/
சர்ச்சைக்கு பின் பாம்பன் பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்
சர்ச்சைக்கு பின் பாம்பன் பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்
சர்ச்சைக்கு பின் பாம்பன் பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்
ADDED : டிச 19, 2024 12:58 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அறிக்கையின் சர்ச்சைக்கு பின் நேற்று மீண்டும் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.
பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி 100 சதவீதம் முடிவடைந்து பாலத்தின் நடுவில் 650 டன் துாக்கு பாலத்தை பொருத்தி பல கட்டமாக திறந்து மூடும் சோதனையை ரயில்வே பொறியாளர்கள் நடத்தினர். இந்நிலையில் இறுதி கட்ட சோதனையாக நவ.,13, 14ல் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி பாலத்தில் 90 கி.மீ., வேகத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்தார்.
அதன் பின் அவரது ஆய்வு அறிக்கையில், துாக்கு பாலத்தில் வெல்டிங் பணியில் சில பகுதிகளை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை எனவும், ரயில்வே தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலின்றி துாக்கு பாலத்தை வடிவமைத்துள்ளதாகவும், இப்பாலத்தில் துருப்பிடித்தால் பராமரிப்பு நடவடிக்கை குறித்து குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார்.
இதனால் எழுந்த சர்ச்சையால் பாம்பன் புதிய பாலம் திறப்பு விழா தள்ளிப்போனது. இந்நிலையில் 34 நாட்களுக்கு பின் நேற்று ரயில்வே வாரிய செயல் இயக்குநர் திலீப்குமார், மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சிறப்பு ரயில் இன்ஜினில் புறப்பட்டு பாம்பன் புதிய பாலம் வழியாக ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் வரை சோதனை நடத்தி ஆய்வு செய்தார்.
இந்த சோதனையின் போது வட மாநில பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்கள் பலர் உடன் இருந்தனர்.