மெத்ஆம்பெட்டமைன் தயாரித்த வழக்கில் மேலும் இருவர் கைது
மெத்ஆம்பெட்டமைன் தயாரித்த வழக்கில் மேலும் இருவர் கைது
ADDED : ஆக 04, 2026 09:47 PM

ராமநாதபுரம்: சிவகங்கைமாவட்டம் இளையான்குடியில் லேத் பட்டறையில் ரகசிய லேப் உருவாக்கி போதைப்பொருளான மெத்ஆம் பெட்டமைன் தயாரித்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரத்தில் மெத்ஆம்பெட்டமைன் விற்ற வழக்கில் 3 வாலிபர்களை போலீசார் ஜூலை 28 ல் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலில் இளையான்குடியில் அதனை தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்தது தெரிய வந்தது. அங்குள்ள லேத் பட்டறையில் ஓராண்டாக ரகசியமாக இயங்கி வந்த லேப்பை கண்டறிந்த போலீசார் 1.37 கிலோ மெத்ஆம் பெட்டமைனை பறிமுதல் செய்தனர்.
மேலும் அதனை தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களான சூடோ எபிட்ரின், சிவப்பு பாஸ்பரஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இளையான்குடியை சேர்ந்த 6 பேர் உட்பட 10 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
அவர்களின் தகவலில் அடிப்படையில் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ஷாஹின்ஷா 30, இளையான்குடி சம்சு தெருவை சேர்ந்த உமாக்கா 56, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 70 கிராம் மெத்ஆம் பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
