ADDED : ஜன 13, 2024 08:19 PM

ராமேஸ்வரம்:மத்திய பிரதேசம், உஜ்ஜயினி பகுதியைச் சேர்ந்த, 25 பேர் நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்து விட்டு, தனுஷ்கோடிக்கு உள்ளூர் வேனில் சுற்றுலா சென்றனர். ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியைச் சேர்ந்த முரளி, 31, வேனை ஓட்டினார்.
ராமேஸ்வரம் திரும்பிய போது, குஜராத் மாநிலம், சூரத் பகுதியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு சுற்றுலா வேன்களில் வரிசையாக தனுஷ்கோடி சென்றனர். கோதண்டராமர் கோவில் அருகில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் டவுன் பஸ்சில் இருந்து பயணியர் இறங்கினர்.
அப்போது, குஜராத் பக்தர்கள் சென்ற ராமேஸ்வரம் நாகநாதன், 60, என்பவர் ஓட்டிச் சென்ற வேன், பஸ்சை முந்திய போது எதிரில் வந்த ம.பி., பக்தர்களின் வேனுடன் நேருக்கு நேர் மோதியது. இதில், இரு வேன்களின் முன்பகுதிகளும் நொறுங்கின.
விபத்தில், ம.பி., உஜ்ஜயினியை சேர்ந்த முகேஷ் மனைவி மனுபாய், 42, ராம்லால் மனைவி நாதன்பாய், 70, பலியாகினர்.
தனுஷ்கோடி போலீசார், தீயணைப்பு வீரர்கள் வேனில் சிக்கி காயமடைந்த, 25 பேரை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். படுகாயமடைந்த இரு வேன் டிரைவர்கள் உள்ளிட்ட 16 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

