காலாவதி தேதியில்லாத தின்பண்டங்களால் பாதிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
காலாவதி தேதியில்லாத தின்பண்டங்களால் பாதிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 04:14 PM
கீழக்கரை: திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்யக்கூடிய தின்பண்டங்களில் தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாமல் உள்ளது.
எப்பொழுது தயாரிக்கப்பட்டது என்ற விபரம் தெரியாததால் அவற்றை வாங்கி சாப்பிடக்கூடிய பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் வயிற்றுப்போக்கு, அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்கின்றனர். குறிப்பாக டாஸ்மாக் கடை அருகே உள்ள இடங்களில் விற்கின்றனர். கீழக்கரையை சேர்ந்த கணேசமூர்த்தி கூறியதாவது: நகர் பகுதிகளில் அதிக அளவு விற்பனை செய்யக்கூடிய முறுக்கு, சீடை, அதிரசம், தட்டு வடை, பொரி உருண்டை, மிக்சர், காராச்சேவு உள்ளிட்ட தின்பண்ட பொருள்களின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி உள்ளிட்டவை எதுவும் குறிப்பிடாமல் பிளாஸ்டிக் கவர்களில் தின்பண்டங்களை மட்டும் வைத்து அவற்றை கடைகளில் காட்சிப்படுத்தி விற்கின்றனர்.
இது எந்த தேதியில் தயாரிக்கப்பட்டது என்ற விபரம் தெரியாததால் நாள்பட்ட காலாவதியான உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடிய பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இது குறித்து உணவு கலப்பட துறை அதிகாரிகள் மவுனம் சாதிக்கின்றனர்.
எனவே உரிய நடவடிக்கை எடுத்து காலாவதி தேதி குறிப்பிடுவதற்கு முறைப்படுத்த வேண்டும் என்றார்.
