கேன்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீரை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
கேன்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீரை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
ADDED : மார் 16, 2026 07:26 AM
ஆர்.எஸ்.மங்கலம்: 20 லிட்டர் கேன்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் தரத்தை ஆய்வு செய்ய மக்கள் வலியுறுத்தினர்.
மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியதை தொடர்ந்து, வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால், 20 லிட்டர் கேன்களில் அடைத்து விற்கப்படும், தண்ணீர் கேன்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.
ஆர்.எஸ்.மங்கலம் டவுன், தேவிபட்டினம், ஆனந்துார் உள்ளிட்ட பகுதிகளில் விற்கப்படும் தண்ணீர் கேன்கள் அசுத்தம் அடைந்தும், பலமுறை பயன்படுத்தப்பட்ட கேன்களாகவும் உள்ளன. தண்ணீர் நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் கேன்கள் குறிப்பிட்ட முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், அரசின் வழிகாட்டுதல்களை பெரும்பாலான நிறுவனங்கள் பின்பற்றாமல், பழைய கேன்களிலேயே தொடர்ந்து தண்ணீரை நிரப்பி விற்கின்றனர்.
சில நிறுவனங்களிலுள்ள குடிநீரை முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாத நிலையில் விற்பதாக புகார் எழுந்துள்ளது. 20 லிட்டர் கேன்களில் தண்ணீர் சப்ளை செய்யும் வாட்டர் பிளான்ட் நடத்தி வரும் தனியார் உரிமையாளர்கள் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களாக உள்ளதால், அரசியல் அழுத்தம் காரணமாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் கண்டும், காணாது உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாரபட்சம் இன்றி, 20 லிட்டர் தண்ணீர் கேன் வினியோகத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
