/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலீஸ் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.. வீணாகிறது. :ஏலம் விடப்படாததால் பழைய இரும்புக்கு போடும் அவலம்
/
போலீஸ் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.. வீணாகிறது. :ஏலம் விடப்படாததால் பழைய இரும்புக்கு போடும் அவலம்
போலீஸ் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.. வீணாகிறது. :ஏலம் விடப்படாததால் பழைய இரும்புக்கு போடும் அவலம்
போலீஸ் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.. வீணாகிறது. :ஏலம் விடப்படாததால் பழைய இரும்புக்கு போடும் அவலம்
ADDED : டிச 21, 2025 06:26 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகளில் கைப்பற்றிய வாகனங்கள் வழக்குகள் முடிந்த பிறகும் ஏலம் விடப்படாமல் திறந்த வெளியில் துருப்பிடித்து மழைநீரில் மூழ்கி வீணாகின்றன. இதனால் நல்ல நிலையில் இருந்த வாகனங்களை கூட பழைய இரும்புக்கு எடைக்கு போடும் நிலை தான் உள்ளது.
குற்றச்செயல்களை தடுப்பதற்காக போலீசார் தினமும் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுழற்சி முறையில் வாகன சோதனையிலும் ஈடுபடுகின்றனர். அவ்வாறு சோதனையின் போது போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள், திருட்டு, மோசடி, கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட பயன்படுத்திய வாகனங்கள், மது அருந்தி வருபவர்களின் வாகனங்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்கின்றனர்.
அதே போல் விபத்துக்களில் சிக்கும் வாகனங்களும் எடுத்து சென்று போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்துகின்றனர். அந்த வாகனங்கள் மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருவதால் விசாரணை முடிந்த பிறகு தான் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். வழக்குகள் நீதிமன்றத்தில் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருப்பதால் வாகனங்களும் போலீஸ் ஸ்டேஷனில் எவ்வித பராமரிப்பும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளன. வழக்குகள் முடிந்தாலும் பெரும்பாலான வாகனங்களை பலர் மீண்டும் எடுத்துச்செல்ல ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் வாகனங்கள் சேதமடைந்து எலும்புக்கூடாக மாறுகின்றன. மழைக் காலங்களில் வாகனங்களை சூழ்ந்து மழைநீர் குளம் போல் தேங்கியிருப்பதால் அதில் உள்ள இன்ஜின், டயர், பேட்டரி போன்ற முக்கிய உதிரிப்பாகங்கள் முழுவதும் சேதமடைந்து எடைக்கு போட வேண்டிய பரிதாபமான நிலையில் உள்ளன. குற்ற வழக்குகளை விரைவாக முடித்து பல லட்சம் மதிப்புள்ள கார், ஆட்டோ, டிராக்டர், டூவீலர்கள் போன்ற வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை வாகனங்களை போலீசார் பாதுகாப்பான இடங்களில் நிறுத்துவதற்கு மாவட்ட அளவில் பிரத்யேக இடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் உள்ளன. இதனால் அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலை உள்ளது. வழக்கின் விசாரணை முடியும் வரை வாகனங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது கட்டாயம். அதற்கான போதிய இடவசதி இல்லாததால் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு அருகில் அல்லது மாவட்ட அளவில் பிரத்யேக இடத்தை ஒதுக்கி கொடுத்தால் வாகனங்கள் பழுதடையாமல் பாதுகாக்கப்படும். அதுமட்டுமின்றி வழக்கு முடிந்து ஏலத்தில் விடும் போது நல்ல விலைக்கு போகும். இதனால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றனர். ---

