ADDED : ஜூலை 08, 2025 10:43 PM
கீழக்கரை; கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் சார்பில் கழிவு மேலாண்மை மற்றும் புதுமைகள் செயல்படுத்துதல் குறித்த ஆறு நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. ஏ.ஐ.சி.டி.இ., பயிற்சி மற்றும் கற்றல் நிறுவனம் சார்பில் நடந்த விழாவிற்கு கல்லுாரி முதல்வர் சேக் தாவூது தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேஷ் குமார் அறிமுக உரையாற்றினார்.மின்னியல் துறை தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.
மண்டபத்தில் செயல்பட்டு வரும் மத்திய மீன் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் முதன்மை விஞ்ஞானி ரவீந்திரன் பங்கேற்று பேசுகையில், இன்றைய சூழலில் கழிவு மேலாண்மை பற்றிய போதிய விழிப்புணர்வு தேவை.
பாசிக்கழிவு மற்றும் அதனை பாதுகாப்பான முறையில் அகற்றுதல் அல்லது மறுசுழற்சி செய்தல் நுண்ணிய பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள் பற்றியும் வெப்பமயமாதலால் பவளப்பாறைகளில் ஏற்படும் பாதிப்புகள், கடல் மாசுபாடு குறித்தும் கூறினார். காணொளி காட்சிகளின் மூலமாக விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆறு நாட்கள் நடந்த முகாமிற்கு நீர் கழிவு மேலாண்மை, கழிவு மறுசுழற்சி கடல் சார்ந்த கழிவுகளை பிரித்தெடுக்கும் முறைகள் பற்றி பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில் உள்ள இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரியில் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர். இணை ஒருங்கிணைப்பாளர் செந்தில் ராஜன் நன்றி கூறினார்.

