/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு: எம்.எல்.ஏ. ஆய்வு
/
அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு: எம்.எல்.ஏ. ஆய்வு
அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு: எம்.எல்.ஏ. ஆய்வு
அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு: எம்.எல்.ஏ. ஆய்வு
ADDED : ஏப் 06, 2025 05:27 AM

திருவாடானை : திருவாடானை அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தினமலர் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் அங்கு ஆய்வு செய்தவர் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றார்.
திருவாடானை அரசு மருத்துவமனையில் தினமும் 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 40 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். காலை நேரங்களில் திருவாடானையை சுற்றியுள்ள கிராம மக்கள் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு உறவினர்களுடன் வந்து செல்கின்றனர்.
சிகிச்சை பெற வரும் நோயாளிகள், உறவினர்க்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் பராமரிப்பின்றி பழுதானதால் குடிநீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். கடைகளில் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
மேலும் 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளையும் இல்லை. இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் நேற்று வெளியானது. அதன் எதிரொலியாக திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். அவர் கூறியதாவது:
குடிநீர் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகளிடம் பேசினேன். எம்.எல்.ஏ., நிதியில் இருந்து புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும். இரு தினங்களுக்கு முன்பு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியனை சந்தித்து திருவாடானை மற்றும் பனைக்குளத்தில் கூடுதல் டாக்டர் நியமனம் குறித்து பேசினேன்.
திருவாடானை மருத்துவமனையிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு மருத்துவ கருவிகளை ராமநாதபுரத்திற்கு எடுத்து செல்வதாக கேள்விபட்டு உடனே தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

