/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரிய கண்மாயில் தேங்கிய தண்ணீர் காலி: பாசன விவசாயிகள் கவலை
/
பெரிய கண்மாயில் தேங்கிய தண்ணீர் காலி: பாசன விவசாயிகள் கவலை
பெரிய கண்மாயில் தேங்கிய தண்ணீர் காலி: பாசன விவசாயிகள் கவலை
பெரிய கண்மாயில் தேங்கிய தண்ணீர் காலி: பாசன விவசாயிகள் கவலை
ADDED : நவ 23, 2025 04:33 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் குறைந்த அளவில் தேங்கியிருந்த தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டதால் தற்போது கண்மாயில் தண்ணீர் காலியாகியதால் பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய், தொடர்ச்சியாக நாரை பறக்க முடியாத 48 குருச்சிகளைக் (கிராமங்களை) கொண்ட கண்மாய் என்ற சிறப்பு பெயர் பெற்றது ஆர். எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். முக்கியத்துவம் வாய்ந்த கண்மாயில் முழு கொள்ளளவாக 1205 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்க முடியும். இது 6.5 அடி நீர் கொள்ளளவு ஆகும்.
சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் இரண்டு அடி தண்ணீர் மட்டுமே கண்மாயில் தேங்கியது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பருவமழை இன்றி தொடர்ந்து நிலவிய கடும் வறட்சியால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதால் பெரிய கண்மாய் பாசன விவசாயிகள் பாசன மடைகளைத் திறந்து நெல் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சினர்.
பாசனமடைகள் திறப்பு மற்றும் வறட்சியால் கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீர் விரைவாக காலி ஆனது. இதனால் பாசனமடைகள் வழியாக தண்ணீர் வெளியேறுவது நின்று விட்டது. இந்நிலையில் தற்போது பெரிய கண்மாயில் பள்ளங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. தற்போது பாசன பகுதிகளில் நெற்பயிர்கள் வளர்ச்சியடைந்த நிலையில் இன்னும் இரண்டு மாதத்திற்கு தண்ணீர் தேவை உள்ளது.
ஆனால் தற்போது கண்மாயில் தண்ணீர் காலியாகியதால் முழுமையாக பருவ மழையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாசன விவசாயிகள் பயனடையும் வகையில் பெரிய கண்மாய்க்கு வைகை அணை நீரை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாசன விவசாயிகளை காப்பாற்ற முடியும்.

