/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாரச்சந்தையில் பொருட்கள் விற்பனையில் எடை மோசடி
/
வாரச்சந்தையில் பொருட்கள் விற்பனையில் எடை மோசடி
ADDED : ஏப் 01, 2025 05:46 AM
திருவாடானை: திருவாடானை பகுதி கிராமங்களில் நடைபெறும் வாரச்சந்தைகளில் முத்திரையிடப்படாத எடைகற்கள் பயன்படுத்துவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாடானை பகுதியில் திருவாடானை, சின்னக்கீரமங்கலம், வெள்ளையபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாரந்தோறும் குறிப்பிட்ட கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறும்.
சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.
விலை மலிவாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாங்க வரும் கிராம மக்களை வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் எடை குறைவாக கொடுத்து ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.
வாரச்சந்தைக்கு மதுரை, காரைக்குடி போன்ற பகுதிகளிலிருந்து காய்கறிகள், பழங்கள் மற்றும் பல பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளும், தொண்டி, ராமேஸ்வரம், ஜெகதாபட்டினம் போன்ற பகுதிகளை சேர்ந்த மீன் வியபாரிகளும் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இதில் பெரும்பாலான வியாபாரிகள் முறையாக முத்திரை இடாத எடை கற்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வாங்கும் பொருட்களில் எடை குறைவாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மக்கள் கூறுகையில், விலை சற்று குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாங்க செல்லும் மக்களை மீன் மற்றும் காய்கறி வியாபாரிகள் எடை குறைவாக கொடுத்து ஏமாற்றுகின்றனர். ஒரு கிலோவிற்கு 100 முதல் 200 கிராம் வரை குறைவாக உள்ளது.
சம்பந்தபட்ட அதிகாரிகள் முத்திரை இடாத எடை கற்களை பறிமுதல் செய்வதுடன் டிஜிட்டல் தராசுகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.