/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் ரயில் துாக்கு பாலத்திற்கு என்னாச்சு
/
பாம்பன் ரயில் துாக்கு பாலத்திற்கு என்னாச்சு
ADDED : ஜூலை 16, 2025 11:41 PM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலத்தை திறந்து மூடுவதில் தொடர்ந்து சிக்கல் உள்ளது.
பாம்பன் கடலில் ரூ.531 கோடியில் புதிய ரயில் பாலம் அமைத்து, இதன் நடுவில் ஸ்பெயின் நாட்டு பொறியாளர்கள் வடிவமைப்பில் 72.5 மீ., (238 அடி) நீளத்தில் துாக்கு பாலம் அமைத்து ஆசியாவிலேயே முதன் முதலாக லிப்ட் முறையில் திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டது.
இதனை ஏப்., 6ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அன்றைய தினமே துாக்கு பாலத்தை மூடும் போது சிக்கல் ஏற்பட்டு ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் ரயில்வே பொறியாளர்கள் மூடினர்.
கடைசியாக மே 21ல் துாக்கு பாலம் திறந்து மூடிய பின் 2 மாதத்திற்கு பிறகு மீண்டும் சரக்கு இழுவை கப்பல்கள், படகுகள் கடந்து செல்ல ஜூலை 12ல் 4வது முறையாக துாக்கு பாலம் திறக்கப்பட்டது. ஆனால் 3:00 மணி நேரம் போராட்டத்திற்கு பின் திறந்து மூடினர். இதனால் ரயில் போக்குவரத்தும் தாமதம் ஆனது.
என்னாச்சு
புதிய துாக்கு பாலத்தை மேலே துாக்கி இறக்க உதவும் இரும்பு கம்பி வடங்கள், இருபுற கேபினில் உள்ள ராட்சத வீலில் துல்லியமாக சுற்றாமல் விலகுவதால் துாக்கு பாலம் திறந்து மூடுவதில் சிக்கல் ஏற்படுவதாகவும், திறந்து மூடும் தொழில் நுட்பத்தில் துவக்கத்தில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் தற்போது வரை சிலசமயம் பிரச்னை நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
பல கோடி செலவில் அமைத்த புதிய துாக்கு பாலத்திற்கு என்னாச்சு என தெரியாமல் ரயில் பயணிகளும் குழப்பத்தில் உள்ளனர்.
துாக்கு பாலத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்தும், இதற்கு தீர்வு என்ன, என கேட்டதற்கு சாதாரண தொழில்நுட்ப கோளாறு தான்.
சரி செய்தாச்சு என பாம்பன் ரயில்வே ஊழியர்கள் மழுப்பலாக தெரிவித்தனர். இதற்கு நிரந்தர தீர்வு காணப்படுவது அவசியம்.