/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
100 ஏக்கரில் பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் கவலை
/
100 ஏக்கரில் பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் கவலை
100 ஏக்கரில் பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் கவலை
100 ஏக்கரில் பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் கவலை
ADDED : ஏப் 18, 2025 11:22 PM

முதுகுளத்துார்:
முதுகுளத்துார் அருகே முத்துவிஜயபுரம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முதுகுளத்துார் அருகே முத்துவிஜயபுரம், முத்துசெல்லாபுரம், பிரபக்களூர், மீசல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் மிளகாய், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். குறைந்தளவு தண்ணீர் போதுமானதால் கண்மாய், ஊருணியில் தேக்கி வைத்த தண்ணீரை பாய்ச்சி வந்தனர்.
தற்போது தண்ணீர் இல்லாததால் போர்வெல் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சுகின்றனர். இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன. விவசாயி அந்தோணி சைமன் கூறியதாவது:
முத்துவிஜயபுரம் கிராமத்தில் நெல் விவசாயத்தில் அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் நஷ்டம் அடைந்தனர். பிறகு மிளகாய்,பருத்தி, நிலக்கடலை விவசாயம் செய்துள்ளனர். தற்போது செடிகள் நன்கு வளர்ந்து வந்த நிலையில் இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து பயிர்களை முழுவதும் சேதப்படுத்தி உள்ளன.
இதனால் 100 ஏக்கருக்கு அதிகமான பயிர்கள் சேதமடைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் நிலக்கடலை அறுவடை செய்ய காத்திருந்த நிலையில் பயிர்கள் முழுவதும் சேதமடைந்துள்ளது. விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விவசாயி லதா கூறுகையில், மிளகாய், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட விவசாயத்திற்காக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை விவசாய நிலத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பி வந்தோம்.
தற்போது இரவு காட்டுப்பன்றிகளை விரட்ட நிலத்தில் தங்கி இருக்கும் நிலை உள்ளது. இதனால் துாக்கம் இல்லாமல் உள்ளோம். சில நேரங்களில் காட்டுப்பன்றிகள் மக்களை விரட்டுகின்றன. ஒரு சிலர் காயமடைந்துள்ளனர். வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

