/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தணியுமா எங்கள் தண்ணீர் தாகம் இன்று உலக தண்ணீர் தினம்
/
தணியுமா எங்கள் தண்ணீர் தாகம் இன்று உலக தண்ணீர் தினம்
தணியுமா எங்கள் தண்ணீர் தாகம் இன்று உலக தண்ணீர் தினம்
தணியுமா எங்கள் தண்ணீர் தாகம் இன்று உலக தண்ணீர் தினம்
ADDED : மார் 22, 2025 05:44 AM
ராமநாதபுரம்: நீரின்றமையா துலகெனின் ↔யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு
என்கிறது உலக பொதுமறையாம் திருக்குறள்.
நீரின்றி அமையாது உலகுநீரின்றி அமையாது உழவுநீரின்றி அமையாது உடல்நீரின்றி அமையாது உயிர்
நீர் இல்லையென்றால் இப்புவியில் எவ்வுயிரும் வாழ முடியாது. உயிரினங்களின் வாழ்க்கைக்கும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கும் நீர் அவசியமானது. மதிப்பு மிகு இயற்கை வளமான நீர் நன்னீர், கடல் நீர், கழிமுக நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது.
நீரின் தரம் பொதுவாக அதனுடைய இயற்கையான இயற்பிய, வேதிய, உயிரிய மற்றும் அழகியல் பண்புகளை கொண்டு வரையறுக்கப்படுகிறது. உயிரினங்களின் வளம் மற்றும் பல்வேறு உயிரிய சமூகங்களுக்கு ஆதாரமாகவும், பொது நலத்தை பாதுகாக்கவும் நீரின் தரம் அவசியமான ஒன்றாகும்.
ஐக்கிய நாடுகள் சபை 2025ம் ஆண்டுக்கான உலக தண்ணீர் தினத்தை ''பனிப்பாறை பாதுகாப்பு'' என்ற கருப்பொருளை மையமாக வைத்து கொண்டாடுகிறது. இதையொட்டி வரும் 2030க்குள் அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சுகாதாரம் சென்றடைய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீர் மாசுபாடு
மனித செயல்பாடுகளால் நரீல் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்கள் நீரை மாசடைய செய்கிறது. இது நீர் நிலைகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் பயன்பாட்டிற்கு உரிய தன்மையை இழந்து விடுவதோடு அந்நீரில் வாழும் உயிரினங்களும் இறந்து விடுவதால் உயிரிய பன்மையத் தன்மையும் நீர்ச்சூழல் மண்டலமும் பாதிப்படைகிறது.
மாசடைந்த நீரை நாம் பருகுவதால் கல்லீரல் அலர்ஜி, டைபாய்டு, நீர்வழிப் பரவும் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் அதிகமாகின்றன. இவற்றை தவிர்ப்பதற்காக சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறோம்.
மினரல் வாட்டர்
தண்ணீர் என்றவுடன் ஆர்.ஓ.,(எதிர் சவ்வூடு பரவல்) தொழில் நுட்பம் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கேனில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் தான் தரம் வாய்ந்த தண்ணீர் என்றாகிவிட்டது. முன்பெல்லாம் ஆறு, ஏரி,குளங்களில் உள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு ஊருக்கு ஒரு சுவையில் தண்ணீர் இருக்கும். இப்போதெல்லாம் கேனில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் ஒரே சுவை கொண்டதாகிவிட்டது.
பெரும்பாலான வீடுகளில் ஆர்.ஓ., தொழில் நுட்ப கருவி பொருத்தப்பட்டு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தி வருகிறோம். 2005ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் 'நியூட்ரியன்ட்ஸ் இன் டிரிங்கிங் வாட்டர்' என்ற பெயரில் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டது.
அதில், ஆர்.ஓ., தொழில் நுட்பம் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்ட தண்ணீரை பருகுவதால் மெக்னீசியம் மற்றும் சில தாது உப்புகளின் அளவு குறைவதாகவும், அதனால் உடலுக்கு தேவையான உப்புச்சத்து நீரின் வழியாக கிடைக்காமல் போகிறது எனவும், உடலுக்கு பல்வேறு விதமான பாதிப்புகளை உண்டாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீர் பஞ்சம்
இந்திய வானிலை ஆய்வு மையம்அண்மையில் வெளியிட்ட தரவுகளின் படி 2024ல் தென்மேற்கு பருவமழை பருவ காலங்களுக்கு ஏற்ற வகையில் அமையாமல் போனது எனவும், கடந்த ஆண்டு அதிக மழைப்பொழிவை பெற்றிருந்தாலும் தேக்கி வைக்க முடியாமல் கடலில் வீணாகிவிட்டது.
இதனால் கோடை காலத்தில் பெரிய அளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் எனவும், கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாகி வறட்சி நிலவும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்தது,
கடந்த ஆண்டு கர்நாடகாவில் கபினி, கே.ஆர்.எஸ் மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் நிரம்பாததால் பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. அதை தீர்க்க ரேஷனில் குடிநீர் வழங்கலாமா எனவும், ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவித்திருந்தது.
நமது மாநிலத்தில் எப்போதும் வறட்சியில் இருக்கும் தென் மாவட்டங்களின் நிலைமையை நினைத்துப் பார்த்தால்சற்றே கவலையடையச் செய்கிறது.
தண்ணீர் தட்டுப்பாடும் தீர்வும்
வான்நின்று உலகம் வழங்கி ↔வருதலால்
தான் அமிழ்தம் என்றுணரற்↔பாற்று
என்கிறார் வள்ளுவர். காலநிலை மாற்றத்தால் வானம் அதிகப்படியான மழைநீரை வழங்கும் போது நாம் அதை வழிந்தோடுவதை அனுமதிக்காமல் அதை சேகரித்து மீண்டும் பயன்படுத்தும் விதத்தில் மழைநீரை சேகரித்து சேமித்து தேவைக்கேற்ப பயன்படுத்துவதே மழை நீர் சேகரிப்பு எனப்படும்.
பெய்யும் மழை நீரை ஆழக்குளிக்குள் சேகரித்தும் வீட்டு மாடியின் கூரைகளில் விழும் மழை நீரை சேகரிப்பு தொட்டிகள் மூலம் சேமித்து வைத்து எதிர்கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, நன்னீரில் உவர் தன்மை ஏற்படாமலும் பாதுகாக்கலாம். நீர் தேவைக்காக மக்கள் இடம் பெயர்வதும் தடுக்கப்படும்.
ஏரி குளங்களின் முக்கியத்துவம்
மழை நீர் சேகரிப்பில் ஏரி, குளங்களின் பங்களிப்பு அளப்பரியது. நிலத்தடி நீர் மட்டம் உயரவும், நன்னீர் உயிரிய பன்மையத் தன்மையை பாதுகாப்பதிலும் ஏரி, குளங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் இருந்ததாக சொல்லப்பட்டது. இன்று அவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் பெய்யும் மழை நீரை தேக்கி வைக்க முடியாமல் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
பசுமை இல்ல விளைவு
பெருகி வரும் மக்கள் தொகை, தொழிற்சாலைகள் பெருக்கம், நகரமயமாக்கல் போன்றவைகளால் உலகளாவிய பிரச்னையாக புவி வெப்பமடைதல் இருந்து வருகிறது. பசுமை இல்ல வாயுக்களான கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவைகளால் புவி வெப்பமயமாதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனால் துருவப்பகுதியில் பனிக்குன்றுகள் மற்றும் பனிக்கட்டிகள் உருகத் துவங்குகின்றன. இதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிக்குள் புகுவதால் நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டதாக மாறிவிடும்.
கால நிலையில் ஏற்படும் மாற்றங்களால் வெள்ளப்பெருக்கு, வறட்சி ஏற்பட்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.குடிக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவோம் என்று உலக மக்கள் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று உலகளாவிய வர்த்தக சந்தையில் நீரும் இடம்பெற்றுவிட்டது. நீர் விலை மதிப்பு மிக்க பொருளாகிவிட்டது.
மூன்றாம் உலகப்போருக்கு நீரே மூலப் பொருளாக அமையும் என்ற கருத்தும் நிலவுகிறது.
எனவே நீர் மேலாண்மை பற்றியும், மழை நீர் சேகரிப்பு பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படாவிடில் '' தண்ணி இல்லா காடு அது ராமநாடு'' என்ற சொலவடை தமிழ்நாட்டுக்கே பொருந்தும் நிலை ஏற்படலாம்.
தென் ஆப்பிரிக்கா நகரமான கேப்டவுனில் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் போய் விடலாம் என்ற சூழ்நிலையில் ஏப்.,12ம் தேதியை 'டே ஆப் ஜீரோ' என்று அறிவித்து உலகளாவிய தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
தற்போது பெங்களூருவுக்கும் அந்த நிலை ஏற்பட்டு விட்டது. அந்த நிலை தமிழ்நாட்டுக்கும் வராமல் தடுக்க வேண்டுமானால் இருக்கும் ஏரி, குளங்கள் துார்வாரப்பட வேண்டும்.
முறையான வடிகால்களை ஏற்படுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அத்தனை நீர்நிலைகளையும் மீட்டெடுத்து மழைநீர் சேமிப்பை செய்தால் மட்டுமே தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியும்.
மேலும் தண்ணீர் நாம் பருகும் திரவப்பொருள் என்பதை எதிர்கால தலைமுறைக்கும் எடுத்துச்சொல்ல முடியும். இல்லையேல் கேன்களுக்குள் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரை கேப்சூலுக்குள் அடைத்து விற்பனை செய்யும் நிலை ஏற்படலாம்.
- செ.மணிவண்ணன்உயிரியல் ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளிதினைக்குளம், ராமநாதபுரம்