/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில் சீரமைப்பு பணிகள் விழாவிற்குள் முடிவடையுமா
/
கோயில் சீரமைப்பு பணிகள் விழாவிற்குள் முடிவடையுமா
ADDED : ஏப் 18, 2025 11:33 PM
திருவாடானை:
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ரூ.2 கோடியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை வைகாசி விசாகத் திருவிழாவிற்குள் முடிக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கருவறை மண்டபம் சேதமடைந்தது. ஆங்காங்கே செடிகள் வளர்ந்ததால் விரிசல் பெரிதாகி மழைகாலத்தில் தண்ணீர் உள்ளே இறங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது. எனவே கோயிலை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து ரூ. 2 கோடியில் கோயிலை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கியது. ஓராண்டுக்கு முன்பு பணிகள் துவங்கியது. மேல் தளத்தில் புதிய தட்டோடுகள் பதிக்கப்பட்டது. தற்போது கோயில் சுற்றுப்பிராகரத்தில் கற்கள் பதிக்கும் பணிகள் நடக்கிறது.
தேவஸ்தான செயல் அலுவலர் பாண்டியன் கூறியதாவது: இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதற்குள் பணிகள் முடிக்கப்படும். கோயில் பிரகாரத்தை சுற்றிலும் கற்கள் பதிக்கும் பணிகள் முடிந்தவுடன் பிரதோஷ நாட்களில் சுவாமி ஊர்வலம் நடைபெறும் என்றார்.

