/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்திலிருந்து கோவைக்கு ரயில் இயக்கப்படுமா
/
ராமேஸ்வரத்திலிருந்து கோவைக்கு ரயில் இயக்கப்படுமா
ADDED : ஜூலை 18, 2024 09:45 PM

ராமேஸ்வரத்திலிருந்து கோவைக்கும், பாலக்காடு பகுதிக்கும் மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்த போது ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது ராமேஸ்வரத்திலிருந்து கோவைக்கு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் ராமநாதபுரம், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக 510 கி.மீ வரை சுற்றி செல்கிறது. ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக இயக்கினால் 392 கி.மீ., மட்டுமே.
இதனால் 118 கி.மீ., குறையும். அதே போல் ராமேஸ்வரத்திலிருந்து தினசரி பாலக்காடு பகுதிக்கு ரயில் இயக்கப்பட்டு வந்தது. அந்த ரயில் அகலப்பாதையாக மாற்றுவதற்காக நிறுத்தப்பட்டது. அகலப்பாதை அமைக்கப்பட்ட பின் இன்று வரை இயக்கப்படாமல் உள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து கோவைக்கு ரயில் இயக்கப்படுமானால் ஆன்மிக ஸ்தலங்களை பயணிகள் பார்வையிடுவதற்கு ஏதுவாக அமையும். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, ஏர்வாடி உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் இருந்து பழநி செல்வதற்கும் எளிதாக இருக்கும்.
மாதவன், வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர்: ராமேஸ்வரத்திலிருந்து கோவை மற்றும் பாலக்காடு பகுதிக்கு மீட்டர் கேஜ் பாதை இருந்த போது தினசரி ரயில் இயக்கப்பட்டது. பயணிகள் பயன் பெற்று வந்தனர்.
அகலப்பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட இந்த இரு வழித்தடங்களிலும் ரயில்கள் மீண்டும் இயக்கப்படாமல் உள்ளது.
ஆன்மிக ஸ்தலங்களுக்கு வரும் வட மாநில பயணிகளுக்கு இந்த ரயில்கள் பயனுள்ளதாக இருக்கும். எனவே மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.