/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அழிவின் விளிம்பில் அரண்மனை ஓவியங்கள் பாதுகாக்கப்படுமா: மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்துமா
/
அழிவின் விளிம்பில் அரண்மனை ஓவியங்கள் பாதுகாக்கப்படுமா: மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்துமா
அழிவின் விளிம்பில் அரண்மனை ஓவியங்கள் பாதுகாக்கப்படுமா: மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்துமா
அழிவின் விளிம்பில் அரண்மனை ஓவியங்கள் பாதுகாக்கப்படுமா: மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்துமா
ADDED : ஆக 02, 2025 12:22 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனையில் உள்ள 17ம் நுாற்றாண்டு ஓவியங்கள் மீது சுற்றுலாப் பயணிகளின் கிறுக்கல்களும் துாசியும் நிறைந்து சிதிலமடையும் நிலையில் உள்ளதால் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். ராமநாதபுரத்தில் உள்ள ராமலிங்க விலாச அரண்மனை 1674-1710 வரை ஆட்சி செய்த கிழவன் சேதுபதியால் கட்டப்பட்டது. கருவறை, அர்த்த மண்டபம் என ஒரு கோயிலின் அமைப்புடன் காணப்படும் கோட்டையுள் ராமலிங்கவிலாசம் உள்ளது. இதனுள் சேதுபதி மன்னர்கள் நவராத்திரி விழாவைச் சிறப்பாக கொண்டாடுவர்.
இலக்கியத்திலும், கலையிலும் ஈடுபாடு கொண்ட முத்து விஜய ரகுநாத சேதுபதி 1725ல் கோயில்கள், ராமாயணம், பாகவத காட்சிகள், சேதுபதி மன்னர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை ராமலிங்க விலாசத்தில் ஓவியமாக இடம்பெற செய்தார்.
அதில் ரகுநாத சேதுபதிக்கும் தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜிக்கும் நடந்த போர், மதுரை நாயக்கர் சேதுபதிக்கு ரத்தின பட்டாபிஷேகம் செய்தல், அவரை மேலை நாட்டார் வந்து பார்த்தல் முதலிய வரலாற்று நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. மேல் மாடியில் உள்ள ஓவியங்களில் சேதுபதி மன்னரின் அகழ்வாயில் இடம்பெற்றுள்ளது.
தமிழிலும், தெலுங்கிலும் ஓவியத்திற்கான விளக்கங்கள் எழுத்தப்பட்டுள்ளன. வட்டாரப் பழக்க வழக்கங்களின் தாக்கம் அதிகம் காணப்படும் ஓவியமானது இயக்க உத்திமுறையில் வரையப்பட்டுள்ளது. இது பிற ராமாயண ஓவியங்களில் இருந்து தனித்துவமாக காணப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ராமலிங்க விலாசம் அரண்மனையை தமிழக அரசின் தொல்லியல் துறை 1978ல் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்தது. தற்போது ராமலிங்கவிலாசம் சேதுபதி மன்னர்களின் வரலாற்றை கூறும் அருங்காட்சியமாக உள்ளது. இதை காண வரும் சுற்றுலாப் பயணிகள் ஓவியங்களில் பெயர் எழுதுவது, மை பூசுவது என ஓவியத்தை சிதைத்து வருவதாக தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.தொல்லியல் ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
ராமநாதபுரத்தின் அடையாளமான ராமலிங்க விலாசம் அரண்மனையை தொல்லியல் துறை முறையாக பராமரிக்காமல் பெயரளவுக்கு செயல்படுகிறது. அரண்மனையை காண வரும் சுற்றுலாப் பயணிகள் அதில் உள்ள ஓவியத்தின் முக்கியத்துவம் தெரியாமல் சேதப்படுத்துகின்றனர்.
பாதுகாக்கப்பட வேண்டிய ஓவியத்தின் மீது பலர் பெயர் எழுதி வைத்துள்ளனர். அரண்மனை துாண்கள் முழுவதும் கிறுக்கல்களாக காணப்படுகிறது. சில இடங்களில் கட்டுமானப் பணி மேற்கொள்வதாக கூறி ஓவியத்தை சிதைத்து வைத்துள்ளனர்.
பாதுகாக்கப்பட வேண்டிய ஓவியங்கள் துாசி படிந்து, சிதிலமடைந்து காணப்படுகிறது. ராமநாதபுரம் சீமையின் வரலாற்றை கூறும் ஓவியங்களை காக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும் என்றார்.