/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அடிப்படை வசதியில்லாத மேல மானாங்கரை அமைச்சர் தொகுதியில் அவலம்
/
அடிப்படை வசதியில்லாத மேல மானாங்கரை அமைச்சர் தொகுதியில் அவலம்
அடிப்படை வசதியில்லாத மேல மானாங்கரை அமைச்சர் தொகுதியில் அவலம்
அடிப்படை வசதியில்லாத மேல மானாங்கரை அமைச்சர் தொகுதியில் அவலம்
ADDED : அக் 05, 2024 04:01 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலமானாங்கரை கிராமத்தில் குடிநீர், மின் விளக்கு, பஸ் உட்பட அடிப்படை வசதிகளின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழச்சாக்குளம் ஊராட்சி மேல மானாங்கரை கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இங்கு சில மாதங்களாகவே காவிரி குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் தவிக்கின்றனர்.
குடிநீருக்காக டிராக்டர் தண்ணீரை பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. பஸ், இரவு மின் விளக்கு உட்பட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர். அமைச்சர் ராஜகண்ணப்பனின் முதுகுளத்துார் தொகுதிக்கு உட்பட்ட மேல மானாங்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதர அதிகாரிகள் முன்வர வேண்டும்.
கிராமத்தினர் கூறியதாவது:
ஜெயமுருகன்: பல ஆண்டுகளாக பஸ் வசதி இல்லை. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் 3 கி.மீ., நடந்து சென்று முதுகுளத்துார்-- கடலாடி ரோடு நீதிமன்றம் பஸ் ஸ்டாப் அருகே காத்திருந்து பஸ்சில் செல்கின்றனர். மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட வாடகை வாகனங்களில் செல்லும் நிலை உருவாகியது.
மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை நேரங்களில் அரசு பஸ் இயக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் தற்போது சேதமடைந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் விழாக்கள் நடத்த நகர் பகுதியில் கூடுதல் பணம் செலவழிக்கின்றனர். எனவே புதிதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வில்லம்மாள்: காவிரி குடிநீருக்காக எப்போது வரும் என்று காத்திருந்து குடங்களை வரிசையில் வைத்துஉள்ளனர். டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் வெளியில் வருவதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர்.
குடிநீர், மின் விளக்கு, பஸ் உட்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் ஆய்வு செய்து கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்துதர உத்தரவிட வேண்டும் என்றார்.