கடல் ஆமைகளை பாதுகாக்க விசைப்படகில் 'டெட்' சாதனம் பொருத்தும் பணி துவக்கம்
கடல் ஆமைகளை பாதுகாக்க விசைப்படகில் 'டெட்' சாதனம் பொருத்தும் பணி துவக்கம்
ADDED : ஜன 30, 2026 05:33 AM
தொண்டி: கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் விசைப்படகு வலைகளில் 'டெட்' எனப்படும் ஆமை விலக்கு சாதனம் பொருத்தும் பணிகள் துவங்கியுள்ளது. சர்வதேச கடல் உணவுச் சந்தையில், குறிப்பாக அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இறால் ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் ஆமைகள் பாதிக்கப்படவில்லை என்ற சான்றிதழ் மிக அவசியம். இழுவை வலைகளில் ஆமைகள் சிக்கி உயிரிழப்பதைத் தடுக்க 'டெட்' என்ற நவீன சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொண்டி அருகே சோலியக்குடி லாஞ்சியடி விசைப்படகில், மத்திய கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழக மீன்வளத்துறை இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
கடலில் வலைகளை விரித்து அதில் ஆமைகள் சிக்காமல் தப்பிக்கும் விதம் மற்றும் மீன்களின் தரம் குறையாமல் சேகரிக்கப்படும் விதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முதல் கட்டமாக ஒரு விசைப்படகில் இந்த சோதனை நடந்தது. மீன்வளத்துறை துணை இயக்குநர் வேல்முருகன், உதவி இயக்குநர் ராஜேந்திரன், தொண்டி மீன்வளத்துறை எஸ்.ஐ., அய்யனார் ஆய்வு செய்தனர்.
இது குறித்து மீன்வளத்துறை அலுவலர்கள் கூறுகையில், இந்தச் சோதனை ஓட்டம் எதிர்பார்த்தபடியே நன்றாக அமைந்தது.
இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஆமைகளை அழியாமல் காப்பதோடு மட்டுமல்லாமல், நமது நாட்டு இறால் ஏற்றுமதி தடையின்றி நடைபெறவும், மீனவர்களின் வாழ்வாதாரம் உயரவும் வழிவகை ஏற்படும்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து விசைப்படகுகளிலும் இச்சாதனத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றனர்.
