/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இருக்கு.. ஆனா இல்ல... ; வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் பயனில்லாத நிலை ; பயன்படுத்த முடியாமல் ஊராட்சி தலைவர்கள் வேதனை
/
இருக்கு.. ஆனா இல்ல... ; வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் பயனில்லாத நிலை ; பயன்படுத்த முடியாமல் ஊராட்சி தலைவர்கள் வேதனை
இருக்கு.. ஆனா இல்ல... ; வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் பயனில்லாத நிலை ; பயன்படுத்த முடியாமல் ஊராட்சி தலைவர்கள் வேதனை
இருக்கு.. ஆனா இல்ல... ; வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் பயனில்லாத நிலை ; பயன்படுத்த முடியாமல் ஊராட்சி தலைவர்கள் வேதனை
ADDED : அக் 09, 2024 04:03 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஊராட்சி நிர்வாகங்களில் பணிகளை மேற்கொள்ள துவக்கப்பட்ட வங்கி கணக்குகளில் பணம் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் வீணாக வங்கியில் உள்ளதாக ஊராட்சி தலைவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்டங்கள், ஊழியர்கள் சம்பளம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு என நான்கு விதமான கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. முதல் எண் கணக்கில் குடிநீர், தெரு விளக்கு பராமரிப்பு, அடிப்படை கட்டமைப்பு பணிகள் உள்ளிட்ட தலைவர்களின் தனி அதிகாரத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கான தொகை வழங்கப்படுகிறது.
இரண்டாம் எண் கணக்கில் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு கட்டடங்களில் குடிநீர், மின்சாரம் ஆகிய கட்டணங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கணக்கு பராமரிக்கப்படுகிறது. ஏழு மற்றும் எட்டாம் எண் கணக்குகளில் உள்ள நிதியில் ஊராட்சி செயலர், துாய்மைப் பணியாளர்கள், துாய்மைக் காவலர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், முதல் எண் கணக்கு மூலமே ஊராட்சி பகுதிகளுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்த முதல் கணக்கில் வழங்கப்படும் குறைந்த அளவு நிதியால் ஊராட்சி தலைவர்களால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதால் தலைவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இரண்டாம் எண் கணக்கில் குடிநீர் கட்டணம் மற்றும் மின் கட்டணத்திற்கு மட்டும் பயன்படுத்தும் நிலையில் இன்று வரை பெரும்பாலான ஊராட்சிகளில் பல லட்சம் வங்கி கணக்கில் கிடப்பில் உள்ளது. ஊராட்சி தலைவர்களின் பதவிக்கால முடிவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் முதல் எண் கணக்கில் போதிய நிதி இல்லாமலும், இரண்டாம் எண் கணக்கில் அதிகளவிலான நிதி வீணாகி உள்ளதாலும், ஊராட்சி தலைவர்கள் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே இரண்டாம் எண் கணக்கில் உள்ள தொகையை பயன்படுத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் நாகமுத்து கூறுகையில், இரண்டாம் எண் கணக்கில் ஒவ்வொரு ஊராட்சிகளும் பல லட்சம் ரூபாய் வங்கிகளில் உள்ளன. இதனால் பொது மக்களுக்கு எந்த வளர்ச்சியும் இல்லை.
வங்கிகள் தான் ஊராட்சிகளின் பணத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நிலை உள்ளது. எனவே அரசு இரண்டாம் எண் கணக்கில் உள்ள தொகையை மக்கள் பணிகளுக்கு செலவு செய்யும் வகையில் ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றார்.
---