/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் இளைஞர் குத்திக்கொலை: 8 பேர் கைது
/
ராமேஸ்வரத்தில் இளைஞர் குத்திக்கொலை: 8 பேர் கைது
ADDED : ஜன 15, 2025 11:41 PM

ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் சேராங்கோட்டை, தெற்கு கரையூர் பகுதிகளை சேர்ந்த இரு தரப்பினரிடையே அடிக்கடி அடிதடி நடந்தது. நேற்று முன்தினம் இரவு சேராங்கோட்டையை சேர்ந்துவரை தெற்கு கரையூரை சேர்ந்தவர்கள் தாக்கினர்.
இதுகுறித்து கேட்பதற்காக சேரங்கோட்டையை சேர்ந்த நம்புகுமார் 35, சேதுபதி 24, சூர்யா 25, ஹரிபிரபாகரன் 32, சூரியபிரகாஷ் 25, விஜி 32 உள்ளிட்ட சிலர் தெற்கு கரையூர் சென்றனர்.
அங்கு இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது.
இதில் சேராங்கோட்டை நம்புகுமார் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர். அனைவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் கழுத்தின் பின்புறத்தில் கத்திக் குத்துப்பட்ட நம்புகுமார் உயிரிழந்தார். மற்ற 5 பேரும் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து தெற்கு கரையூரை சேர்ந்த சொர்க்கேஸ்வரன் 20, ரஞ்சித் 21, கருணாகரன் 23, கார்த்திக் சரண் 23, சரண்குமார் 22, நம்புராஜன் 21, செல்வராஜ் 20, ஜீவித் 19, ஆகியோரை கைது செய்தனர்.தப்பி ஓடிய சதீஷ்குமார், அஸ்வின், சூர்யா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கொலையில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்யக் கோரி நேற்று சேராங்கோட்டையை சேர்ந்தவர்கள் சாலை மறியல் செய்தனர். பின் போலீசார் சமரசம் செய்ததும் மறியலை வாபஸ் பெற்றனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

