/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சைபர் கிரைம் போலீசாக நடித்து பேராசிரியை வீட்டில் நுாதன கொள்ளை
/
சைபர் கிரைம் போலீசாக நடித்து பேராசிரியை வீட்டில் நுாதன கொள்ளை
சைபர் கிரைம் போலீசாக நடித்து பேராசிரியை வீட்டில் நுாதன கொள்ளை
சைபர் கிரைம் போலீசாக நடித்து பேராசிரியை வீட்டில் நுாதன கொள்ளை
ADDED : பிப் 09, 2025 11:56 PM
ஆற்காடு; சைபர் கிரைம் போலீஸ் எனக் கூறி, பேராசிரியை வீட்டில் 16 சவரன் நகை, 1 லட்சம் ரூபாயை மர்ம கும்பல் கொள்ளையடித்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி குடியிருப்பைச் சேர்ந்தவர் லட்சுமி பிரியா, 40. பி.இ., - எம்.டெக்., சைபர் செக்யூரிட்டி படித்துள்ள இவர், சென்னை தனியார் பொறியியல் கல்லுாரியில் பேராசிரியையாக பணிபுரிகிறார்.
இவருக்கு இரு மகன்கள். 2014ல் விவாகரத்து பெற்று, தாய், மகன்களுடன் ஆற்காட்டில் வசிக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது, லட்சுமி பிரியா பெயரைக் கூறி ஒரு கும்பல் அழைத்தது. கதவை திறந்து பார்த்தபோது, எட்டு பேர் நின்றிருந்தனர்.
'சென்னை சைபர் கிரைம் போலீசார்' என கூறியவர்கள், 'வீட்டில் போதைப்பொருள் உள்ளதாக தகவல் வந்துள்ளது; சோதனை செய்ய வேண்டும்' என கூறவே, அவர்களை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார்.
பீரோவில் இருந்த 16 சவரன் நகை, 1 லட்சம் ரூபாயை எடுத்து கட்டில் மீது வைத்து போட்டோ எடுத்துள்ளனர். லட்சுமி பிரியாவை விசாரணைக்கு வர அழைத்தனர். பெண் போலீசார் இல்லாததால் வர மறுத்துள்ளார்.
அப்போது, கும்பலில் வந்த ஒருவர் லத்தியால் தாக்கியதில், லட்சுமி பிரியா கூச்சலிட்டுள்ளார். இதனால், பணம், நகைகளை எடுத்துக் கொண்டு, வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி, கும்பல் தப்பியுள்ளது.
அதன் பிறகே வந்தது கொள்ளை கும்பல் என தெரிய வந்தது. லட்சுமி பிரியா புகாரில், ஆற்காடு டவுன் போலீசார் வழக்கு பதிந்து, கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

