ADDED : பிப் 09, 2025 09:17 PM
அரக்கோணம்:அரக்கோணம் வழியாக செல்லும் ரயில்களில், கஞ்சா கடத்துவதாக, அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார், இரண்டு குழுக்களாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள இரட்டை கண் பாலம் அருகே, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த இருவரை நேற்று முன்தினம் இரவு பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் நாயக், 49, மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த கேசவ் பாக், 39, என்பது தெரிய வந்தது. அவர்களிடம் பைகளில் மறைத்து வைத்திருந்த இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல, அரக்கோணம் ரயில் நிலையம் வடக்கு பகுதியில் நின்றிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இம்ரான் கான், 29, மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார், 19, என்பதும் தெரியவந்தது.
அவர்கள், பையில் மறைத்து வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேற்கண்ட நால்வரிடம் இருந்து 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.