/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
பஸ் மோதி மாணவி பலி கண்டித்து மக்கள் மறியல்
/
பஸ் மோதி மாணவி பலி கண்டித்து மக்கள் மறியல்
ADDED : ஜன 26, 2025 02:25 AM
அரக்கோணம்:அரக்கோணம் அருகே, தனியார் பேருந்து மோதி பிளஸ் 2 மாணவி உயிரிழந்ததை கண்டித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த, தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு, 46. அங்குள்ள தனியார் உறைவிட பள்ளியில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சுதா ஜெயராணி. அதே பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களது மகள் ரீனா, 17, அரக்கோணத்தில் தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம், பள்ளி சென்று விட்டு டியூஷனுக்கு சென்றார். அன்றிரவு 8:30 மணியளவில், தந்தை வேலுவுடன், 'டி.வி.எஸ்., ஸ்கூட்டி'யில் அரக்கோணத்திலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார்.
கும்பினிப்பேட்டையில், சோளிங்கரிலிருந்து அரக்கோணம் நோக்கி சென்ற தனியார் பேருந்து, மோதுவது போல சென்றதால், நிலை தடுமாறிய வேலு, ஸ்கூட்டியுடன் விழுந்தார்.
மாணவி ரீனாவும் விழுந்தபோது, அவரது மீது பேருந்து ஏறியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆத்திரமடைந்த அப்பகுதியினர், மறியலில் ஈடுபட்டு, பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். அவர்களை அரக்கோணம் டவுன் போலீசார் சமாதானம் செய்து, நடவடிக்கை எடுப்பதாக கூறி, மறியலை கைவிட செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.