ADDED : ஜூன் 26, 2026 01:18 AM

திமிரி: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, வரதேசி நகர், மலை அடிவாரத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், மலையின் மேலே ராக்கெட் லாஞ்சர் ஒன்று, வெடிக்காமல் இருப்பதை கண்டார்.
திமிரி போலீசார், வெடிகுண்டு தடுப்புபிரிவு குழுவினர், ராக்கெட் லாஞ்சரை சுற்றிலும், மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
திமிரி போ லீசார் கூறுகையில், 'இந்த மலைப்பகுதிகளில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், ராணுவ பயிற்சி முகாம் அமைக்கப்பட்டு, பயிற்சி ஒத்திகை நடந்தது. இந்த ஒரு ராக்கெட் லாஞ்சரை மட்டும், விட்டு சென்று இருக்கலாம். சென்னையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு, மாவட்ட காவல்துறை சார்பில் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது' என்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட நாசவேலை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஷ்ணு கூறுகையில், ''ராக்கெட் லாஞ்சர் உள்ள இடத்தில் இருந்து, 150 மீட்டர் துாரத்தில் குடியிருப்புகள் உள்ளதால், இரவு, பகலாக போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜூன் 29 அல்லது, 30ல் ராணுவ அதிகாரிகள், நேரில் வந் து ராக்கெட் லாஞ்சரை செயலிழக்கச் செய்வர்,'' என்றார்.
