/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
காரில் வந்து நகை திருடிய பெண் சிக்கினார்
/
காரில் வந்து நகை திருடிய பெண் சிக்கினார்
ADDED : ஏப் 08, 2025 06:49 AM
நெமிலி : காரில் வந்து நகை வாங்குவது போல நடித்து, நகைக்கடையில் ஒன்றரை சவரன் நகையை நைசாக திருடிச் சென்ற பெண், 'சிசிடிவி' பதிவால் சிக்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியைச் சேர்ந்தவர் சுசில்குமார், 43; அதே பகுதியில், நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார்.
மார்ச் 23 மாலை சுசில்குமார் கடைக்கு, காரில் வந்திறங்கிய பெண் ஒருவர், டிசைன்களை பார்ப்பது போல் வெவ்வேறு நகைகளை பார்த்துள்ளார்.
அப்போது மொபைல் போனில் பேசுவது போல் பேசிக்கொண்டே, ஒன்றரை சவரன் நகையை, நைசாக திருடி, கடையிலிருந்து வெளியேறி, காரில் தப்பிச் சென்றார்.
சுசில்குமார், நகையை சரிபார்த்தபோது, ஒன்றரை சவரன் நகை காணாமல் போனது தெரியவந்தது. நெமிலி போலீசில் சுசில்குமார் புகார் அளித்தார்.
போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், நகையை திருடியது திருவள்ளூரைச் சேர்ந்த ரஹானா, 49, என, தெரியவந்தது. போலீசார், நேற்று அவரை கைது செய்து, அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.
இவர் மீது, ஏற்கனவே, திருவள்ளூர், சென்னையில் உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், நகை திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

