sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலத்தின் தலையாய பிரச்னையை தீர்க்க தனி கவனம்

/

சேலத்தின் தலையாய பிரச்னையை தீர்க்க தனி கவனம்

சேலத்தின் தலையாய பிரச்னையை தீர்க்க தனி கவனம்

சேலத்தின் தலையாய பிரச்னையை தீர்க்க தனி கவனம்


ADDED : அக் 06, 2011 02:17 AM

Google News

ADDED : அக் 06, 2011 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ''சேலம் மாநகராட்சியில், நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று தி.மு.க., மேயர் வேட்பாளர் கலையமுதன் உறுதியளித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதி குறித்து, தி.மு.க., மேயர் வேட்பாளர் கலையமுதன் தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாநகர மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அன்றாடம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை நிச்சயம் போக்குவோம். கடந்த தி.மு.க., ஆட்சியில், 253 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்ட தனிக்குடிநீர் திட்டப்பணிகள், 40 சதவீதம் முடங்கி கிடக்கிறது. நான் மேயராக பொறுப்பு ஏற்றதும் அந்த பணியை போர்க்கால அடிப்படையில் செய்து முடித்து, ஆறு மாதத்தில், மாநகர மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். தற்போது, நமக்கு கிடைக்கும் குடிநீர் வெறும், 720 லட்சம் லிட்டர் தண்ணீர். தனிக்குடிநீர் திட்டம் நிறைவு பெற்றால், 1,790 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

இது, 25 ஆண்டுக்கான கனவு திட்டம் ஆகும். இதன் மூலம் நாள்தோறும், தேவைக்கேற்ப 24 மணி நேரமும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும். 2012ம் ஆண்டு நீங்கள், வீட்டில் தொட்டிகளில் குடிநீர் தேக்கி வைக்க வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் குடிநீர் குழாயை இரவு, பகல் எந்த நேரம் திறந்தாலும் தாராளமாக வரும். சேலம் மாநகர மக்களுக்காக சபதமேற்று முடிப்பேன்.

பாதாள சாக்கடை திட்டத்துக்காக வெட்டப்படும், பாதைகள் உடனுக்குடன் சீரமைக்கப்படும். மேட்டூர் நீரேற்று நிலையங்களில் உள்ள அனைத்து பழைய மோட்டார்களை மாற்றி, வெளிநாட்டு தரத்துடன் கூடிய ராட்சத மோட்டார்கள் அமைக்கப்படும். மின் தடை ஏற்பட்டால், தொடர்ந்து மோட்டார்கள் இயங்கிட நவீன ஜெனரேட்டர்கள், நான்கு இடங்களில் அமைக்கப்படும்.

சேலம் மாநகர மக்களுக்கு தட்டுப்பாடின்றி தினமும் குடிநீர் வழங்குவதை சபதமாக ஏற்கிறேன். சேலம் மாநகரத்தை குப்பையில்லாத மாநகரமாக மாற்றுவேன். மக்கள் நோய் இன்றி சுகாதாரமாக வாழ நடவடிக்கை எடுப்பேன். சேலம் மாநகராட்சியில் ஆன் லைன் மூலம், 60 வார்டுகளிலும், பிறப்பு- இறப்பு சான்றிதழ், விண்ணப்பித்த இரண்டு மணி நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.

எருமாபாளையத்தில் குப்பைகள் கொட்டப்படமாட்டாது. மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மாற்று பாதைகள் அமைக்கப்படும். நான்கு ரோடு, ஐந்து ரோடு, சாரதா கல்லூரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைமேம்பாலம் அமைக்கப்படும். கட்டிட வரைபடங்கள், விண்ணப்பித்த ஒரு வாரத்துக்கு ஆன்லைன் மூலம் தாமதமின்றி உடனுக்குடன் வழங்கப்படும்.

சொத்துவரி, குடிநீர் கட்டணம், அந்தந்த வார்டு அலுவலகங்களில் செலுத்துவதை போல, ஆன்லைன் மூலமாக செலுத்தும் வசதி செய்யப்படும். இயந்திரங்கள் மூலம் சாக்கடைகள் உடனுக்குடன் சுத்தம் செய்யப்படும். புது பஸ் ஸ்டாண்ட் முற்றிலும் நவீன மயமாக்கப்படும்.

மூன்றாண்டுக்குள் பெங்களூருவில் உள்ள பஸ் ஸ்டாண்டை போல் ஆசியாவிலேயே முதல் பஸ் ஸ்டாண்டாக, மூன்று அடுக்கு போக்குவரத்து வசதியுடன் கட்டப்படும். கடந்த 50 ஆண்டுக்கு முன், கட்டப்பட்ட நகர பேருந்து நிலையம், புதுப்பிக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

திறந்த வெளி கழிப்பிடமாக காட்சியளிக்கும் போஸ் மைதானத்தை, முறைப்படுத்தி, பர்மா பஜாரை போல், மைதானத்தை சுற்றிலும் பல்வேறு ஸ்டால்கள் அமைக்கப்படும். நான்கு இடங்களில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்படும். இதன் மூலம் வியாபாரிகள் பயன் அடைவர்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் லாரி மார்க்கெட், மாநகர எல்லையில் உள்ள மாமாங்கம் பகுதிக்கு மாற்றப்படும். அங்கு, லாரிகள் பழுதுபார்க்கப்படும் இடம், ஓட்டுநர்கள் தங்குவதற்கான வசதி, ஆட்டோமொபைல் மற்றும் உபகரணங்கள் விற்பனை வளாகமும் கட்டித்தருவேன்.

வ.உ.சி., மார்க்கெட் தெருக்களில் மக்கள் பாதிக்கப்படுவதால், அதை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றி, ஓராண்டுக்குள், நான்கு அடுக்கு வளாகத்தில் வ.உ.சி., மார்க்கெட் அமைய நடவடிக்கை எடுப்பேன். இங்கு வயதான மற்றும் மாற்று திறனாளிகள் செல்வதற்கு 'லிஃப்ட்' வசதி செய்து கொடுக்கப்படும்.

செவ்வாய்ப்பேட்டை இடுகாடு, காக்காயன் சுடுகாட்டை போல, நவீன எரிவாயு தகனமேடையாக மாற்றப்படும். பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ஆறு மாதத்துக்குள் முடிக்கப்படும். அனைத்து இடுகாடுகளையும், தூய்மைப்படுத்தி, தண்ணீர் வசதியுடன், சுற்றிலும், சுற்றுச்சுவர் அமைத்து, மாதம் ஒரு முறை ஆய்வு மேற்கொள்ளப்படும். அனைத்து இடங்களிலும் பசுமை பூங்கா அமைக்கப்படும்.

திருமணி முத்தாறு சீரமைப்பு திட்டம், நிச்சயமாக ஆறு மாதத்தில் முடிக்கப்படும். மாநகரின் அனைத்து பகுதிகளிலும், பூமிக்கடியில் மின் கேபிள் பதிக்கப்படும். பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்க, ஆனந்தா பாலம் பணி விரைந்து முடிக்கப்படும்.

சேலம் நான்கு ரோட்டில் இருந்து ஐந்து ரோடு வரையும், ஐந்து ரோட்டில் இருந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா வரையிலும் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியின் நான்கு இடங்களில் 'டெர்மினல்' பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும்.

கொசு தொல்லையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, மலேரிய, டெங்கு ஒழிப்பு பணியில் தனிக்கவனம் செலுத்தப்படும். தற்போது இயங்கி வரும் மாநகராட்சி மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், படுக்கை வசதிகள், மருந்துகள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அதை மாற்றி, உடனடியாக மகப்பேறு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு இணையாக அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி, ஏழை மக்களின் மனம் குளிர நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பாக பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

சேலம் நகராட்சியாக இருந்த போது, சில இடங்களில் இலவச மருந்தகங்கள் இருந்தது. மீண்டும், மண்டலம் வாரியாக மருந்தகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுவதை போல மாத்திரைகள், மருந்துகள், நீரழிவு நோயாளிகள், ரத்து அழுத்த நோயாளிகள், இருதய கோளாறு உடையவர்கள் ஆகியோருக்கு தேவைப்படும் மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படும்.

அரசு தலைமை மருத்துவமனையில், போதிய சுகாதாரம் இல்லை. பணியாளர்கள் பற்றாக்குறையே காரணம். அதனால், நோயாளிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சட்டசபை, நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியை கொண்டு, மாநகராட்சி மூலம் அரசு தலைமை மருத்துவமனையை தூய்மைப்படுத்தி, அங்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

மாநகராட்சிக்கு சொந்தமாகன பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் சீரமைக்கப்படும். மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இணையாக பராமரிக்கப்படும். மழை வந்தால், காந்தி ஸ்டேடியம் தெப்பக்குளமாக காட்சியளிக்கிறது. அங்கு மழை நீர் வடிகால் அமைத்து, மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சொத்துவரி விதிக்கும் போது, ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்படாத வண்ணம், அவர்களிடம் கருத்து கேட்டு, சொத்துவரி வசூல் செய்வது எளிமையாக்கப்படும். தெரு மின் விளக்குகள் முறையாக எரிகிறதா என்பதை ஆன்லைன் மூலம் அலுவலகத்தில் இருந்து பார்க்கும் வசதி செய்யப்படும்.

மீன் வளத்துறை நிதியை பெற்று, மாநகரில் உள்ள மீன்மார்க்கெட்டுகள் நவீன மயமாக்கப்படும். குமரகிரி ஏரி, மூக்கனேரி ஆகிய இரண்டு ஏரிகளை தூர்வாரி தூய்மைப்படுத்தி, அருகிலேயே மேல் நிலை தொட்டி அமைத்து ஆர்ஓ பிளான்ட் மூலம் குடிநீரை தூய்மைப்படுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கும், ஹோட்டல்கள், லாட்ஜ், மண்டபங்கள் மற்றும் அவசர தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும்.

சேலம் மாநகரில், 210 இடங்களில் பொது கிணறுகளில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை சுத்தப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும். அரிசிப்பாளையம் தெப்பக்குளம் தூர்வாரப்பட்டு, தண்ணீர் தூய்மைப்படுத்தப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படும்.

சேலத்தில் நடைபயிற்சி செய்பவர்களுக்கு வசதியாக இரண்டு இடங்களில், சென்னையை போல நடைபயிற்சி பூங்கா உருவாக்கப்படும். சேலம் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படும்.

வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்து, சம்மந்தப்பட்ட வாகனங்களில், செட்டிச்சாவடியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு கொண்டு செல்லப்படும். மார்க்கெட், உழவர்சந்தை, ஹோட்டல், நிறைந்த பகுதிகளில், தினசரி இரவு நேரங்களில், போக்குவரத்துக்கு இடையூறு இன்றி துப்புரவு பணி மேற்கொள்ளப்படும்.

சேலம் மாநகரில், நாய் மற்றும் பன்றி தொல்லைகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். கடந்த 2002ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கடுமையான கட்டிட வரைமுறைச்சட்டத்தினால், பொதுமக்களுக்கு பெறும் பாதிப்பு ஏற்படும் என்பதால், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் என்ற முறையில், அதை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தேன். மீண்டும் அ.தி.மு.க., ஆட்சியில் வராமல் இருக்க நடவடிக்கை எடுப்பேன்.

வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களின் துணைகொண்டு, சேலத்தில் இரண்டு இடங்களில், நான்கு சக்கர வாகன பார்க்கிங் நவீன முறையில் அமைக்கப்படும். மூன்றடுக்கு மற்றும் நான்கடுக்கு முறையில் அமைக்கப்படும். கீழே நிறுத்தப்படும் வாகனங்கள், தானியங்கி மூலம் மேலே உள்ள அடுக்குகளுக்கு செல்லும் வதி செய்து தரப்படும்.

சம்மந்தப்பட்டவர்கள் கீழே இறங்கும் போது இயந்திரத்தில், உங்கள் வாகனத்துக்குரிய அடையாள அட்டையை இணைத்தால், தானியங்கி மூலம் உங்கள் வாகனம் உங்கள் இடத்துக்கு வந்து சேரும். ஆசியாவில் முதல் முறையாக இந்த வசதி சேலம் மாநகராட்சியில் செய்து கொடுக்கப்படும். மாநகராட்சியில் போதிய நிதி இல்லை. எனவே, தனியார் நிறுவனம் மூலம் நெடுஞ்சாலை டோல்கேட்டை போல கட்டண வசதியுடன் ஏற்படுத்தி தரப்படும்.

திருமணிமுத்தாறு, கடைவீதி, புது பஸ் ஸ்டாண்டு ஆகிய இடங்களில் அமைக்கப்படும். தேவைப்பட்டால் விரிவுப்படுத்தப்படும். சேலம் மாநகரில் முக்கிய பாதைகளில் சிங்கப்பூரில் உள்ளதை போல, நவீன வெளிநாட்டு இயந்திர வாகனங்களை கொண்டு, இரவு நேரத்தில், தூய்மைப்படுத்தப்படும். மொத்தத்தில், சேலம் மாநகராட்சியின் கனவு திட்டங்களை நனவாக்குவேன், என்று அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us