/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக்கிரமிப்பு அகற்ற வி.சி., கட்சியினர் எதிர்ப்பு
/
ஆக்கிரமிப்பு அகற்ற வி.சி., கட்சியினர் எதிர்ப்பு
ADDED : பிப் 05, 2025 01:31 AM
ஆக்கிரமிப்பு அகற்ற வி.சி., கட்சியினர் எதிர்ப்பு
மேட்டூர் : மேட்டூர், துாக்கானம்பட்டி காவிரி கரையோரம், 25 ஆண்டுக்கு மேலாக மாட்டு இறைச்சி கடைகள் செயல்படுகின்றன. ஆரம்பத்தில், 2 கடைகள் இருந்த நிலையில் தற்போது, 12 கடைகளாக அதிகரித்துள்ளன. அப்பகுதியில் உள்ள இறைச்சி கடைகள், வீடுகள் என, 18 ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கு வீடு, கடை உரிமையாளர்களுக்கு, 2 நாட்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது. சிலர் ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்த பொருட்களை அகற்றினர். ஆனால் கடைகள் அகற்றப்படவில்லை.
நேற்று காலை மேட்டூர் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் குமரேசன் உள்ளிட்ட ஊழியர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற, பொக்லைனுடன் வந்தனர். பாதுகாப்புக்கு, மேட்டூர் போலீசாருடன் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டன.
உடனே ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர்கள், வி.சி., மேற்கு மாவட்ட செயலர் மெய்யழகன் உள்ளிட்ட அக்கட்சியினர் கூடினர். குறிப்பாக, தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர். போலீசார் பேச்சு நடத்தியும் முடிவு ஏற்படவில்லை.
இதனால், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நகராட்சி அலுவலர்கள், மேட்டூர் தாசில்தார் முன்னிலையில் பேச்சு நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.