/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறையில் எஸ்.ஐ., ஆய்வு: ஏட்டுக்கு 'நோட்டீஸ்'
/
சிறையில் எஸ்.ஐ., ஆய்வு: ஏட்டுக்கு 'நோட்டீஸ்'
ADDED : பிப் 20, 2025 01:45 AM
சிறையில் எஸ்.ஐ., ஆய்வு: ஏட்டுக்கு 'நோட்டீஸ்'
ஆத்துார்:மாவட்ட சிறையில் அனுமதியின்றி எஸ்.ஐ., ஆய்வு செய்த விவகாரத்தில், சிறை ஏட்டுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சிறையில், 65 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு சில நாட்களுக்கு முன் வந்த கியூ பிரிவு எஸ்.ஐ., தியாகராஜன், அடையாள அட்டையை காட்டி, சிறைக்குள் சென்று, அதன் வளாகத்தை புகைப்படம், வீடியோ எடுத்துள்ளார். சிறை கண்காணிப்பாளர் வைஜெயந்தி வெளியே சென்றிருந்த நிலையில், அங்கு பணியில் இருந்த முதல்நிலை ஏட்டு சத்யமூர்த்தி, எஸ்.ஐ.,யை, சிறைக்குள் அனுமதித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று, சேலம் மத்திய சிறை எஸ்.பி., வினோத், மாவட்ட சிறையில் ஆய்வு செய்தார். தொடர்ந்து சத்யமூர்த்தியிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' வழங்கினார்.
இதுகுறித்து, எஸ்.பி., வினோத் கூறுகையில், ''ஆய்வுக்கு செல்லும்போது அனுமதி கடிதம் அல்லது எஸ்.பி.,யிடம் அனுமதி பெற்றுச்செல்ல வேண்டும். ஆனால் கியூ பிரிவு எஸ்.ஐ., அடையாள அட்டையை காட்டி சென்றுள்ளார். சிறையில் இருந்த கைதியிடம் பேசி சென்றதாக புகார் எழுந்தது. உள்ளே அனுமதியின்றி வீடியோ, புகைப்படம் எடுக்க, உயர் அதிகாரி உத்தரவின்றி, தன்னிச்சையாக அனுமதித்த சத்யமூர்த்திக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
எஸ்.ஐ., தியாகராஜன் கூறுகையில், ''சிறை சுற்றுச்சுவர் பாதுகாப்புத்தன்மை குறித்து தகவல் சேகரிக்க, சிறைக்கு சென்றேன். கைதி யாரிடமும் நலம் விசாரிக்கவில்லை,'' என்றார்.

