ADDED : ஏப் 11, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி : மல்லுார் அருகே வேங்காம்பட்டி பூவாயம்மன் பண்டிகையையொட்டி எருதாட்டம் நேற்று நடந்தது. இதற்கு தாரமங்கலம், நெய்க்காரப்பட்டி, அமரகுந்தி, அரூர், மங்களாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 60க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. கோவில் வளாகத்தில், ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. இளைஞர்கள், காளையின் முகத்துக்கு நேராக பொம்மையை ஆட்டி உசுப்பேத்தினர். கோபமடைந்த காளை, தலையை ஆட்டியபடி சீறிப்பாய்ந்தன.
ஆவேசமாக ஓடி வந்த காளையால் இளைஞர்கள் நாற்புறமும் சிதறி ஓடினர். பார்வையாளர்கள் பகுதியில் பாய்ந்த காளையை, கயிறு மூலம் கட்டுப்படுத்தினர். சில காளைகள், இளைஞர்களை நெருங்கவிடாமல், 'கெத்து' காட்டி நின்று விளையாடின. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள், எருதாட்டத்தை கண்டு மகிழ்ந்தனர்.

