/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பழநிக்கு திரளான பக்தர்கள் பாதயாத்திரை
/
பழநிக்கு திரளான பக்தர்கள் பாதயாத்திரை
ADDED : ஜன 17, 2024 10:44 AM
வீரபாண்டி: பொங்கல் பண்டிகையன்று, தமிழர் கடவுள் முருகனை தரிசிக்க, சேலம் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை செல்வர். அதன்படி கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, பூலாவரி, உத்தமசோழபுரம், வீரபாண்டி சுற்றுவட்டாரங்களில், 100க்கும் மேற்பட்ட பாதயாத்திரை குழுக்கள் மூலம் பாதயாத்திரை செல்ல, 48 நாட்களுக்கு முன், மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் அவரவர் ஊர் விநாயகர், மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கி பாதயாத்திரை புறப்பட்டனர்.
ஊர்களில் இருந்து பிரதான சாலைக்கு வந்த பக்தர்கள், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் தரிசித்து விட்டு பாதயாத்திரையை தொடர்ந்தனர். 3 நாட்கள் யாத்திரைக்கு பின் பழநியை அடைந்து முருகனை தரிசித்து விட்டு ஊர் திரும்புவர். ஒரே நாளில் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரை சென்றதால் சேலம் - கோவை 4 வழிச்சாலையில் பக்தர்கள் நடந்தபடியே காட்சியளித்தனர். வழி நெடுக, பக்தர்களுக்கு பழம், மோர், குளிர்பானம், பிஸ்கட், தண்ணீர் பாட்டில்களை, அன்பர்கள் வழங்கினர். ஆங்காங்கே நீர், மோர் பந்தல் அமைத்து அன்னதானமும் வழங்கப்பட்டது.
அதேபோல் ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டாரங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரை புறப்பட்டனர். மேலும் தைப்பூச நாளில் முருகனை தரிசிக்க பாத யாத்திரை செல்பவர்களும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
39ம் ஆண்டு
பனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி திருமுருகன் திருச்சபையை சேர்ந்த பக்தர்கள், 39ம் ஆண்டு பாத யாத்திரையை தொடங்கினர். அவர்கள் காவடி எடுத்து, முருகனின் பக்தி பாடலை பாடி, ஆடியபடி சென்றனர்.

