ADDED : ஜன 19, 2025 01:29 AM
முதிர்ந்து சாய்ந்த நெற்பயிர்
மேட்டூர் : மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசன நீரால், மேட்டூர் தாலுகா நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி ஊராட்சிகளில், ஏராளமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதில் நவப்பட்டி, காவிரியாற்றின் ஒரு கரையிலும், கோல்நாயக்கன்பட்டி, மற்றொரு கரையோரமும் உள்ளன.
கடந்த ஜூலை, 30 முதல், கடந்த, 15 வரை, மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில், பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் நவப்பட்டியில், 750 ஏக்கர், கோல்நாயக்கன்பட்டியில், 500 ஏக்கரில், விவசாயிகள், 155 நாட்கள் வளரும் வெள்ளை பொன்னி நெல் சாகுபடி செய்தனர்.
இந்நிலையில் இரு ஊராட்சிகளிலும் சில பகுதிகளில், அறுவடைக்கு தயாரான நிலையில், பொன்னி நெல் முதிர்ந்த நிலையில் சாய்ந்துவிட்டன. மேலும் சில பகுதிகளிலும் நெற் பயிர்கள் சாயத்தொடங்கியுள்ளன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'நெல் மணிகளை தாங்கக்கூடிய அளவு தண்டு இல்லாததால் சாய்ந்துவிட்டன. விரைவில் அறுவடை செய்யப்படும். இருப்பினும் சாய்ந்ததால் விளைச்சலில் சற்று பாதிப்பு ஏற்படும்' என்றனர்.

