ADDED : ஜூன் 03, 2025 01:14 AM
மேட்டூர், அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும், 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பா.ம.க., எம்.எல்.ஏ., சதாசிவம் விலையில்லா பாடபுத்தகங்களை வழங்கினார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட இயக்குனர் மாரியப்பன், தலைமை ஆசிரியர் ஜெயகுமார், ஆசிரியர் கழக தலைவர் மதியழகன், துணைத் தலைவர் சந்திரசேகரன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* ஆத்துார், கெங்கவல்லி, தம்மம்பட்டி, தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், நேற்று வகுப்புகளுக்கு வந்த மாணவ, மாணவியரை பூக்கள் துாவி, இனிப்பு வழங்கி, உற்சாகத்துடன் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் வரவேற்றனர்.
* வாழப்பாடி அடுத்த கண்கட்டி ஆலா பகுதியில் உள்ள, அரசு தொடக்கப்பள்ளியில் நடப்பாண்டு பள்ளி திறப்பு விழாவை முன்னிட்டு, முதல் நாளில் பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவியருக்கு கிரீடம், மலர் மாலை அணிவித்து, இனிப்பு கொடுத்து, தலைமையாசிரியர் புஷ்பா வரவேற்றார். பின், விலையில்லா பாடபுத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன.
நெல்லிக்காய் செடி கொடுத்து வரவேற்பு
பனமரத்துப்பட்டி அடுத்த, குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளி நேற்று திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு மாலை அணிவித்து, ரோஜா பூ மற்றும் நெல்லிக்காய் செடி, நெல்லி கனி கொடுத்து, பனமரத்துப்பட்டி வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் வரவேற்றார்.
ஒன்றாம் வகுப்பில் புதியதாக, 24 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டனர். பள்ளி மாணவ, மாணவியர் எண்ணிக்கை, 94 ஆக உயர்ந்துள்ளது. பெற்றோர், மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஆசிரியர் தெய்வநாயகம், பள்ளி மேலாண்மை குழுவினர் பங்கேற்றனர்.