/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரிகளை நிரப்பக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
ஏரிகளை நிரப்பக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 11, 2025 01:08 AM
தாரமங்கலம், காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு மற்றும் விவசாயிகள் சார்பில், தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி ஏரியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊராட்சி முன்னாள் தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். அதில், 9 ஏரிகளை நிரப்பக்கோரி கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: உபரிநீர் திட்டத்தில், 100 ஏரிகள் இணைக்கும் பணி முடிந்துள்ளது. மானாத்தாள் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரை, ராமிரெட்டிப்பட்டி ஏரிக்கு கொண்டு வர இணைப்பு கால்வாய் பணி இதுவரை தொடங்கப்படவில்லை.
இதனால் அந்த வழியில் பயன்பெறக்கூடிய மல்லிக்குட்டை, மோட்டூர், ஆரூர்பட்டி,
ராமிரெட்டிப்பட்டி உள்பட, 9 ஏரிகளுக்கு உபரிநீர் செல்லவில்லை.அதனால் மானத்தாள் ஏரியில் இருந்து வெளியேறும் நீர், ராமிரெட்டிப்பட்டி ஏரிக்கு செல்ல இணைப்பு கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும். அதேபோல் சூரப்பள்ளியில் இருந்து குப்பம்பட்டி உள்பட, 10 ஏரிகளின் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து, 'தமிழக அரசே, உபரிநீர் மூலம் எங்கள் பகுதி ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடு' என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு மாநில செயலர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், அனைத்து விவசாய சங்கத்தினர், அப்பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.