ADDED : மார் 09, 2025 01:33 AM
ஆசிரியை வீட்டில் 100 பவுன் கொள்ளை
அதியமான்கோட்டை:நல்லம்பள்ளி அருகே, பட்டப்பகலில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து, 100 பவுன் நகை மற்றும், 1.50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, சேலம் -- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வீட்டில், ஷேர்லின்பெல்மா, 44, வசிக்கிறார்.
இவர், நல்லம்பள்ளி அடுத்துள்ள கோவிலுாரிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.
இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரின் தந்தை தேவதாஸ், அரசு ஊழியராக இருந்து இறந்து விட்டார். தாய் மேரி, பணி ஒய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை. தாய் மேரியுடன், ஷேர்லின்பெல்மா வசித்து வந்தார்.
மேரி மருத்துவ சிகிச்சைக்காக, வேலுாருக்கு சென்ற நிலையில், வழக்கம்போல் ஷேர்லின்பெல்மா வீட்டை பூட்டிவிட்டு நேற்று பள்ளி-க்கு சென்றார். பள்ளி முடிந்து, மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே சென்று சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 100 பவுன் நகை மற்றும் 1.50 லட்சம் ரூபாய் கொள்ளை போனது
தெரியவந்தது.தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் மற்றும் அதியமான்கோட்டை போலீசார், திருட்டு நடந்த ஆசிரியை வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க, அதியமான்கோட்டை போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.