ADDED : ஏப் 02, 2025 01:42 AM
சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம்,:நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.
அதில் சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்தல்; மாநில நெடுஞ்சாலைகளில், 210 சுங்கச்சாவடிகள் அமைத்து தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசாணை நகலை எரிக்க முயன்றனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தினர். பின் அனைவரும் கலைந்து சென்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் சுரேஷ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலர் அமராவதி உள்ளிட்ட நிர்வாகிகள், சேலம், இடைப்பாடி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து சாலை பணியாளர்கள் பங்கேற்றனர்.

