ADDED : நவ 12, 2025 01:21 AM
மேட்டூர், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், மேட்டூர் கிளை சார்பில், அங்குள்ள தாலுகா அலுவலகம் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் பூபதி ராஜன் தலைமை வகித்தார்.
அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தல்; ஓய்வூதியர்கள், 70 வயதை கடந்தால், 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல்; சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலர் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்குதல்; மருத்துவ காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை நீக்குதல் உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
செயலர் ரத்தினசாமி, துணை தலைவர் காவேரி, பல்வேறு அரசு துறைகளை சேர்ந்தவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் ஓமலுார் வட்ட கிளை சார்பில், ஓமலுார் தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். அதில், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சங்ககிரி தாலுகா கிளை சார்பில், அங்குள்ள தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். அதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட இணை செயலர் ஜெயமணி, பொருளாளர் தனசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

