ADDED : ஏப் 09, 2025 01:43 AM
தேனீக்கள் கொட்டி 70 பேர் காயம்
கெங்கவல்லி:தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே சுவேத நதி குறுக்கே உள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியில், தேனீ கூடு உள்ளது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, அந்த கூட்டில் இருந்து வந்த தேனீக்கள், அந்த வழியே பைக், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களை கொட்டின.
இதில், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பின் அங்கு வந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனால் காந்தி நகர் கவுரி, 34, உலிபுரம் கார்த்திக், 31, ரஞ்சித்குமார், 28, தம்மம்பட்டி மணி, 25, விஜயகுமார், 42, ஸ்ரீராம், 17, ஆகாஷ்ராஜா, 14, முத்துமணிகண்டன், 14, நாகியம்பட்டி முரளிபிரசாத், 9, உள்பட, 10 பேர் படுகாயமடைந்து, தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், 20 பேர் முதலுதவி சிகிச்சை பெற்றுச்சென்றனர். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.தீர்த்தக்குட ஊர்வலம்ஓமலுார், பெரியேரிப்பட்டியில் உள்ள, பூதனுார் அய்யனாரப்பன் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று காலை, அமரகுந்தி சொக்கநாதர் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம் ஊர்வலம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியேரிப்பட்டி சாலையில் சென்றபோது, பறந்து வந்த தேனீக்கள் கொட்டின. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர், பதறியடித்து ஓடினர். ஆனால், 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சிலருக்கு முகத்தில் கொட்டியதில் வீக்கம் ஏற்பட்டது. அரை மணி நேரத்துக்கு பின் மீண்டும் ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை அடைந்தது.
பக்தர்கள் கூறுகையில், 'தேன் கூட்டின் மீது இளைஞர்கள் கல் வீசியதால், தேனீக்கள் பறந்து வந்துள்ளன' என்றனர்.