/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விதிமீறி தண்டவாளத்தை கடக்கும் மக்களுக்கு ஆபத்து: சுரங்கப்பாதை அமைத்தால்தான் உயிருக்கே உத்தரவாதம்
/
விதிமீறி தண்டவாளத்தை கடக்கும் மக்களுக்கு ஆபத்து: சுரங்கப்பாதை அமைத்தால்தான் உயிருக்கே உத்தரவாதம்
விதிமீறி தண்டவாளத்தை கடக்கும் மக்களுக்கு ஆபத்து: சுரங்கப்பாதை அமைத்தால்தான் உயிருக்கே உத்தரவாதம்
விதிமீறி தண்டவாளத்தை கடக்கும் மக்களுக்கு ஆபத்து: சுரங்கப்பாதை அமைத்தால்தான் உயிருக்கே உத்தரவாதம்
ADDED : ஜூலை 04, 2024 10:56 AM
வாழப்பாடி: எம்.பெருமாபாளையம் கிராமத்தின் நடுவே உள்ள தண்டவாளத்தை, அப்பகுதி மக்கள், விதிமீறி கடந்து செல்கின்றனர். இதனால் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத அவலம் தொடர்வதால் சுரங்கப்பாதை அமைக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
---சேலம் மாவட்டம் வாழப்பாடி, எம்.பெருமாபாளையம் ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதி மக்கள் தினமும் தொழில் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, எம்.பெருமாபாளையத்தில் இருந்து பத்தாங்கல்மேடு பஸ் ஸ்டாப் வழியே, 4 கி.மீ., சுற்றிச்செல்ல, 15 நிமிடம் ஆகும்.
ஆனால் அந்த வழியே செல்லாமல், விரைவாக செல்ல, வாழப்பாடி - மின்னாம்பள்ளி ரயில்வே ஸ்டேஷன் இடையே உள்ள தண்டவாளத்தை பயன்படுத்துகின்றனர். அதன் இருபுறமும் வளைவாக இருப்பதால், ரயில் பக்கத்தில் வரும்போது மட்டும் தெரியும். விபரீதத்தை உணராமல் அப்பகுதி மக்கள், விதிமீறி தினமும் அந்த தண்டவாளத்தில் நடந்து செல்கின்றனர். அதை விட, இருசக்கர வாகன ஓட்டிகள், அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி தள்ளிச்செல்கின்றனர்.
அப்போது தண்டவாளத்தில் வாகனங்கள் சிக்கி தடுமாறி விழுகின்றனர். அப்போதும் அந்த வழியிலேயே தொடர்ந்து பயணிக்கின்றனர். இப்படி ஆபத்தான முறையில் கடந்து, மேட்டுப்பட்டி வழியே பயணம் செய்து வருகின்றனர்.
அங்கு எந்த நேரமும் ரயில் வரும் என்பதால் ஆட்கள் நடக்கக்கூடாது என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியும் தினமும், 500க்கும் மேற்பட்ட பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இது மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையை காட்டுகிறது. அப்பகுதியில் ஏற்கனவே ரயிலில் அடிபட்டு உயிரிழப்பும் நேர்ந்துள்ளன. அதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன், அங்கு தற்காலிக ரயில்வே கேட் அமைக்கவோ, நிரந்தர தீர்வாக சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைக்கவோ, அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ''பரிசீலனை செய்து உயர் அதிகாரியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.