ADDED : ஆக 20, 2024 03:16 AM
சேலம்: தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக, சேலத்தில் நேற்று மாலை, 4:30 மணியளவில் வெயில் கொளுத்திய நிலையில், திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. அதன்பின் வானத்தில் கருமேகங்கள் திரண்டு, ஒருமணி நேரத்துக்கும் மேலாக, மாநகரின் சில இடங்களில் மழை கொட்டியது. அதனால், கோரிமேடு ஏ.டி.சி., நகர் தரை பாலத்தை மூழ்கியபடி மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாரதா கல்லுாரி சாலை, புதுபஸ் ஸ்டாண்ட் அருகே அத்வைத ஆஸ்ரமம் ரோடு, கண்ணகி நகர், லட்சுமி நகர் பகுதிகளில் தண்ணீர் குளம்போல தேங்கி நின்றன.
இதேபோல, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழை காரணமாக, மாலையில் பணி முடிந்து வாகனங்களில் வீடு திரும்பியவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, 5 ரோட்டில் இருந்து சாரதா கல்லுாரி வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால், பாதசாரிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மாநகரில் போதிய வடிகால் வசதி இல்லாத காரணத்தால், மழை நின்றும் சாலைகளில் தேங்கிய மழைநீருடன் கலந்த சாக்கடை கழிவுநீர் தாமதமாகவே வடிந்ததால் துர்நாற்றம் வீசியது.

