தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தேர்தல் செய்திகள்

தேர்தல் செய்திகள்

தேர்தல் செய்திகள்


ADDED : ஏப் 03, 2026 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 04:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓட்டு கேட்டு வராதீர்... பேனர் வைத்த மக்கள்

வீரபாண்டி தொகுதியில், பனமரத்துப்பட்டி ஒன்றியம் தாசநாயக்கன்பட்டி ஊராட்சி, 8வது வார்டு பொம்மாயி நகரில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

அப்பகுதி மக்கள், வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக, அப்பகுதியில் பேனர் வைத்துள்ளனர். அதில், '25 ஆண்டாக சாலை, வடிகால் வசதி செய்து தரும்படி பலமுறை மனு கொடுத்தும் எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. அதனால் வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்கிறோம். எந்த கட்சிக்காரர்களும் ஓட்டு கேட்க வரவேண்டாம்' என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'வடிகால் வசதியின்றி மழை காலங்களில் மண்சாலை சேறு, சகதியாக மாறிவிடுகிறது. வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. குடியிருப்பு பகுதியை விட்டு, கழிவுநீர் செல்ல வழியில்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது' என்றனர்.

இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், '2023 - 2024ம் நிதி ஆண்டில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், சிமென்ட் சாலை, வடிகால் வசதி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அத்திட்டத்துக்கு நிதி வருவதில் தாமதம் ஏற்பட்டதால் அப்பணி தொடங்கப்படவில்லை. மக்களிடம் பேசி தேர்தல் புறக்கணிப்பை கைவிடவும், சாலை, வடிகால் வசதி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

2ம் நாளில் 19 பேர் மனுதாக்கல்

சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில், கடந்த, 30ல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இரு நாட்கள் விடுமுறை முடிந்து, நேற்று, 2ம் நாளாக மனுதாக்கல் நடந்தது. தொகுதிக்கு தலா ஒரு தேர்தல் அலுவலர், இரு உதவி அலுவலர் பணி அமர்த்தப்பட்டு, காலை, 11:00 முதல் மதியம், 3:00 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

தொகுதி தேர்தல் அலுவலகத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் எல்லைக்கோடு வரைந்து, அதற்குள் வேட்பாளருடன், 4 பேர், அவர்களுடன், 3 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இவை அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன், சுழலும், 'சிசிடிவி' கேமராவில் கண்காணிக்கப்பட்டது. சங்ககிரி, ஓமலுார் தொகுதிகளில் மனுதாக்கல் ஆகவில்லை. மற்ற, 9 தொகுதிகளில், 19 பேர் மனு தாக்கல் செய்தனர்.

அதன்படி தொகுதி வாரியாக மனுதாக்கல் விபரம் வருமாறு:

கெங்கவல்லி(தனி) -- அ.தி.மு.க., நல்லதம்பி; பகுஜன் சமாஜ் கட்சி பாலகிருஷ்ணன்; ஆத்துார்(தனி) - சுயேச்சை ஜெகன்; ஏற்காடு(தனி) - த.வெ.க., ஜனார்த்தனன்; மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கோபி; மேட்டூர் - நா.த.க., காந்தாமணி; இடைப்பாடி - சுயேச்சைகள் சக்திவேல், குமரேசன்; சேலம் மேற்கு - சுயேச்சைகள் அமிர்தலிங்கம், முரளி, சாந்தி, தினேஷ்குமார்; சேலம் வடக்கு - விஸ்வ தமிழ் கழகம் ஜோதிலட்சுமி, சுயேச்சை அஜித்; சேலம் தெற்கு - த.வெ.க., பார்த்திபன், நா.த.க., சோபியா, சுயேச்சைகள் முஹம்மது நஜீருத்தீன், காளிதாஸ்; வீரபாண்டி - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி(லிபரேஷன்) அன்பழகன்.

இதில், 5 பெண்கள். முதல் நாளில், 22 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அத்துடன் சேர்த்து, 2 நாளில், 41 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். நாளை புனிதவெள்ளி விடுமுறை என்பதால், அடுத்து, 4, 6 ஆகிய நாட்கள் மட்டும் மனுதாக்கல் செய்ய அவகாசம் உள்ளது.

பதற்ற ஓட்டுச்சாவடி

பாதுகாப்பு எப்படி

ஓமலுார் தாலுகா அலுவலகத்தில், ஓமலுார் தொகுதி தேர்தல் அலுவலர் கோபாலகிருஷ்ணன் அறை உள்ளது. அங்கு வேட்புமனு பெறப்பட்டு வருகிறது. அதற்கு முதல் நிலை, இரண்டாம் நிலை என, வேட்பு மனுக்கள் முறையாக ஆய்வு செய்ய, போதிய அதிகாரிகள் தனித்தனியே அமர்த்தப்பட்டுள்ளர். இறுதியாக தேர்தல் அலுவலரிடம் மனுதாக்கல் செய்யப்படுகிறது.

அங்கு தேர்தல் பொது பார்வையாளர் வெங்கடமுரளி, நேற்று, மனு பெறும் அலுவலர்களின் பணியை பார்வையிட்டார். பின் கோபாலகிருஷ்ணனிடம், ஓட்டுச்சாவடியில் முடிக்கப்பட்ட பணிகள், பதற்ற ஓட்டுச்சாவடி, அதன் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கேட்டறிந்தார். மேலும் தொளசம்பட்டியில், பதற்ற ஓட்டுச்சாவடியை பார்வையிட்டார். இதையடுத்து சிக்கனம்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையும் பார்வையிட்டார்.

'ரூ.10,000 மதிப்பில் பொருட்கள்

எடுத்துச்சென்றால் ரசீது தேவை'

தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்களுடன் ஆலோசனைக்கு பின், மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி கூறியதாவது:

மாவட்டத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தி அதிகளவில் நடப்பதால், மூலப்பொருட்களை எடுத்துச்செல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து, கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. 10,000 ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்பில் பொருட்கள் எடுத்துச்சென்றால், கண்டிப்பாக அதன் வினியோக ரசீது தேவை.

அதில் பொருள் எடுத்துச்செல்பவர், பெற்று கொள்பவர் விபரம், பொருளின் எடை, உத்தேச மதிப்பு, நாள் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட்டு, ரசீது இருக்க வேண்டும். விற்பனைக்கு பொருட்களை எடுத்துச்செல்லும்போது, விற்பனை ரசீதுடன் விற்பனை பட்டியல் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

3 கிலோ கொலுசையும் பிடிச்சிட்டாங்க... நிலம் விற்ற தொகையும் போச்சு

சேலம் வடக்கு தொகுதி, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு பறக்கும் படை அலுவலர் தேவகுமார் தலைமையில் குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தபோது, 3 கிலோ வெள்ளி கொலுசு வைத்திருந்தார். விசாரணையில் சேலம், குகை, மார்க்கெட் தெருவை சேர்ந்த ரவி என்பதும், செவ்வாய்ப்பேட்டையில் வெள்ளி பட்டறை வைத்திருப்பதும், அங்கிருந்து, 4.80 லட்சம் ரூபாய் மதிப்பில், 3 கிலோ வெள்ளி கொலுகளை, அவர் வீட்டுக்கு எடுத்துச்சென்றதும் தெரிந்தது. இருப்பினும் ஆவணங்கள் இல்லாததால், கொலுசுகளை பறிமுதல் செய்து கருவூலத்துக்கு அனுப்பினர்.

ஓமலுார் தொகுதி, தாரமங்கலம் அருகே செலவடையில் நேற்று இரவு, 8:30 மணிக்கு நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஜலகண்டாபுரத்தை சேர்ந்த, விவசாயி பசுபதி, 55, நிலம் விற்ற, 1.70 லட்சம் ரூபாயுடன், 'டியோ' மொபட்டில் வந்துள்ளார். அவரை நிறுத்தி சோதனை செய்து, பணம் குறித்து கேட்டபோது, ஆவணம் இல்லை. இதனால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மொபட்வீரபாண்டி தொகுதி மருளையம்பாளையம் சோதனைச்சாவடி அருகே நேற்று காலை, சுமதி தலைமையில் கூடுதல் நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில், 'அக்சஸ்' மொபட்டில் வந்த, ஆட்டையாம்பட்டியை சேர்ந்த சசிகுமாரிடம், 61,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

புடவை, 'டைல்ஸ்' வாங்க வந்தோர் புலம்பல்

மேட்டூர் தொகுதி பறக்கும்படை உதவி அலுவலர் கவுதமன்ராஜ் தலைமையில் குழுவினர், தொப்பூர் பிரிவு சோதனைச்சாவடி அருகே நேற்று வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரா, அனந்தபூர், சிண்டிகேட் டில் இருந்து, 'கியா' காரில் வந்தவரை நிறுத்தி விசாரித்தனர்.

ஓட்டி வந்தவர் ராம்மோகன், 43 என்பதும், திருமணத்துக்கு புடவை வாங்க, அந்தியூர் செல்வதாகவும் கூறினார். சோதனையில், 99,000 ரூபாய் வைத்திருந்தார். ஆவணம் இல்லாததால், அந்த பணத்தை குழுவினர் பறிமுதல் செய்தனர்.

ஓமலுார் தொகுதி, கருப்பூரில், சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் கீழ், கூடுதல் கண்காணிப்பு நிலைக்குழு அதிகாரிகள், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 'கிரிஸ்டா' காரில் வந்தவரை நிறுத்தி விசாரித்ததில், மேட்டூரை சேர்ந்த, விவசாயி செல்வராஜ், 50, என தெரிந்தது. காரில் இருந்த பையை சோதனை செய்ததில், 1,02,000 ரூபாய் இருந்தது.

அதுகுறித்து கேட்டபோது, வீட்டுக்கு, 'டைல்ஸ்' கற்கள் வாங்க எடுத்து வந்ததாக தெரிவித்தார். அதற்கு ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஓமலுார் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் பார்த்தசாரதியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அப்பணம், ஓமலுார் கருவூலத்தில் வழங்கப்பட்டது.

த.வெ.க., மேற்கு தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு

த.வெ.க., மேற்கு தொகுதி சார்பில் தேர்தல் பணிமனை அலுவலக திறப்பு விழா நடந்தது.

த.வெ.க., சார்பில் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளராக, அத்தொகுதி பொறுப்பாளர் லட்சுமணன் போட்டியிடுகிறார். போலீஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற இவர், தொகுதி முழுதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக பல்வேறு முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில், த.வெ.க., வின், சேலம் மேற்கு தொகுதி, தேர்தல் பணிமனை, 5 ரோட்டில் அமைக்கப்பட்டிருந்தது. அதை, சேலம் மத்திய மாவட்ட செயலரான, தெற்கு தொகுதி வேட்பாளர் பார்த்திபன் திறந்து வைத்தார்.

தரமான சாலை

தொடர்ந்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்கி, வேட்பாளர் லட்சுமணன் பேசியதாவது:

சேதம் அடைந்த மற்றும் பயன்படுத்த இயலாத சாலைகளை சீரமைக்கவும், புதிதாக தரமான சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சாக்கடை, வடிகால்

முறையான சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். மழைநீர் வடிகால் அமைப்புகளை உருவாக்கி, வெள்ளப்பெருக்கு தடுப்பு, சுகாதார சூழல் உருவாக்கப்படும்.

பொது கழிப்பிடம்

மக்கள் பயன்பாட்டுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான பொது கழிப்பிடங்களை அமைத்து, பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்வதற்கு நிரந்தர ஏற்பாடு செய்யப்படும்.

பட்டா

நில உரிமை இல்லாதவர்களுக்கு சட்டப்பூர்வ முறையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நில விவகாரங்களில் விரைவான தீர்வு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிநீர்

துாய்மையான குடிநீர் வழங்கல் திட்டங்கள், புதிதாக தண்ணீர் தொட்டிகள், குழாய் இணைப்புகள் அமைத்தல், நிலத்தடி நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

குப்பை சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி முறைகளை மேம்படுத்தல், குப்பை கம்பெனிகள் மூலம் ஏற்படும் நிலத்தடி நீர் பாதிப்பு, விவசாய பாதிப்பு, மக்கள் உடல் நலம் பாதிப்பு ஆகியவற்றை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, பூபதி, அசோக் மற்றும் ஒன்றிய, பகுதி, வார்டு, கிளை நிர்வாகிகள், மகளிர் அணி, பூத் கமிட்டி நிர்வாகிகள், அனைத்து சார்பணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இ.பி.எஸ்.,சை சந்தித்த

பா.ம.க., வேட்பாளர்கள்

அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., வெளியூர் பிரசாரத்தை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு, சேலம் வந்தார். தொடர்ந்து நேற்று காலை, நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில், அவரை, பா.ம.க., வேட்பாளர்களான, சேலம் மேற்கு கார்த்தி, சேலம் வடக்கு சதாசிவம் ஆகியோர் சந்தித்து, தேர்தல் தொடர்பாக பேசினர். அதேபோல் முன்னாள் அமைச்சர்களான, கரூர் விஜயபாஸ்கர், ஈரோடு கருப்பண்ணன், அ.ம.மு.க., மாநில பொருளாளர் செல்வம், விவசாய சங்க பிரதிநிதிகளும் சந்தித்து பேசினர்.

தி.மு.க., வேட்பாளர்கள்

இன்று, நாளை அறிமுக கூட்டம்

தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் அறிக்கை:

சட்டசபை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில், கெங்கவல்லி தொகுதி வேட்பாளர் அறிமுகம், ஏப்., 3(இன்று) காலை, 9:00 முதல், 11:00 மணி வரை, கெங்கவல்லி ரெட்டியார் நல சங்க திருமண மண்டபத்தில் நடக்கிறது.

அதேபோல் ஏற்காடு தொகுதிக்கு, மதியம், 12:00 முதல், 2:00 மணி வரை, வாழப்பாடியில் உள்ள சேலம் கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடக்கிறது.

மறுநாள் காலை, 9:30 முதல், 11:30 மணி வரை, வீரபாண்டி தொகுதிக்கு, நெய்க்காரப்பட்டி கிருஷ்ண மஹால் திருமண மண்டபத்திலும், அன்று மதியம், 12:00 முதல், 2:00 மணி வரை, ஆத்துார் தொகுதிக்கு, ஆத்துார் துளுவ வேளாளர் திருமண மண்டபத்திலும் நடக்க உள்ளது.

இதில் அமைச்சர் ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி பேசுகின்றனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும்.

சங்ககிரி வேட்பாளராக

வெற்றி வேல்

தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தில், 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும். பழநியில் உள்ள சுவாமியான முருகப்பெருமான் கையில் இருக்கும் வேலை போன்று, அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., சங்ககிரி வேட்பாளராக வெற்றி வேலையே நிறுத்தியுள்ளார். முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்ய உதவி செய்த வீரபாகு போல், சங்ககிரி தொகுதியில், இ.பி.எஸ்.,க்கு, அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் வீரபாகுவாக செயல்பட்டு வருகிறார். தமிழக தேர்தல்களம், நம் கூட்டணிக்கு சாதகமாக இருந்து வருகிறது.

இதை நம் கட்சியினர், கூட்டணி கட்சியினர் பயன்படுத்தி, வெற்றி பெற வேண்டும்.

- செம்மலை,

முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

தமிழக அரசியலில் நீர்க்குமிழி விஜய்

விஜய், அவருக்கும், தி.மு.க.,வுக்கும் போட்டி என கூறுவது வேடிக்கை. பா.ஜ., - அ.தி.மு.க., குறித்து பேச, அவர் மறுத்து வருகிறார். நீர்க்குமிழி தோன்றும்போது அழகாக இருக்கும். ஓரிரு நிமிடங்களில் அது மறைந்துபோகும். அதுபோல் தமிழக அரசியலில் நீர்க்குமிழியாக மட்டும் விஜய் இருப்பார். அவரது கட்சி, இத்தேர்தலில் முழுமையாக தோற்கடிக்கப்படும். அரசியலில் எந்த நிரந்தர இடத்தையும் அவரால் பிடிக்க முடியாது. இ.பி.எஸ்., பா.ஜ.,வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என நினைத்து வருகிறார். அது நடக்காது. மக்களுக்கு எதிராக, பா.ஜ., அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பல சட்டங்களை ஆதரித்தவர், இ.பி.எஸ்., அதனால், அ.தி.மு.க.,வை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

- சண்முகம்,

மாநில செயலர், மா.கம்யூ.,

சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள்

தி.மு.க., அரசு, சிறுபான்மையினருக்கான கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடுக்கு, பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதோடு, கல்வி உதவித்தொகை, தொழிலக கடனுதவி, 25,000 இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படுகின்றன. தேர்தல் அறிக்கையில், சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள், வாக்குறுதிகளாக வழங்கப்பட்டுள்ளன. அதன்படி சிறுபான்மையினர் தொழில் தொடங்க தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாடு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் வரம்பு, 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலத்துறையை வலுப்படுத்தி, கல்வி, நில சீர்திருத்தம், வீட்டு வசதிக்கு முக்கியத்துவம் அளித்து சம வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

- ராஜேந்திரன், தமிழக அமைச்சர், தி.மு.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us