/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுதானியங்களை சுத்தப்படுத்த 30 கி.மீ., நடைபயணம்
/
சிறுதானியங்களை சுத்தப்படுத்த 30 கி.மீ., நடைபயணம்
ADDED : ஆக 11, 2024 02:57 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியம் குரால்நத்தம் ஊராட்சியில் ஜருகு-மலை உள்ளது.
அங்குள்ள மேலுார், கீழுர் கிராம மக்கள், சாமை, பனிவிறகு, ராகி, கம்பு, கொள்ளு உள்ளிட்ட சிறுதானியங்களை சாகுபடி செய்கின்றனர். அங்கு உற்பத்தியாகும் சிறுதானியத்தை உமி, கல் நீக்கி சுத்தம் செய்யவும், அரைக்கவும் வசதி இல்லை.
இதனால் தானியத்தை தலைசுமையாக துாக்கிக்கொண்டு, ஜருகு மலையில் இருந்து இறங்கி, ஒத்தையடி பாதையில் பனமரத்துப்-பட்டி ஏரி வழியே குரால்நத்தம் அருகே உள்ள குரங்குபுளியமரத்-துக்கு நடந்து செல்கின்றனர்.
அங்குள்ள மில்லில் சிறுதானியத்தை சுத்தம் செய்தும், அரைத்தும் எடுத்து வருகின்றனர். ஜருகுமலையில் இருந்து நடந்து சென்று வந்தால், 30 கி.மீ., அல்லது எருமாபாளையம், சீலநாயக்கன்-பட்டி, பனமரத்துப்பட்டி வழியே பைக்கில் சென்று வந்தால், 45 கி.மீ., ஆகிறது. இதனால் மலைக்கிராம மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறுகையில், ''வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் பொருட்களின் மதிப்பு கூட்டும் இயந்திரங்களை மானி-யத்தில் பழங்குடி மக்களுக்கு வழங்கும் திட்டம் உள்ளது.
அதில் தானியம் அரைக்கும் இயந்திரம், கேழ்வரகு சுத்தப்படுத்தி கல் நீக்கும் இயந்திரம், நெல் அரவை இயந்திரம், பருப்பு உடைக்க மாவு அரைக்கும் இயந்திரம் உள்ளிட்டவை ஜருகு-மலை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.