ADDED : பிப் 15, 2025 01:44 AM
5 கடைகளில் திருட்டு
வாழப்பாடி:வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் அருகே உள்ள அக்ரஹாரம் தான்தோன்றீஸ்வரர் கோவில் கட்டடத்தில் பெட்டிக்கடை நடத்துபவர் சேகர், 41. நேற்று முன்தினம் கடையை பூட்டிச்சென்றார்.
நேற்று காலை திறக்க வந்தபோது, பூட்டு உடைந்து கிடந்தது. கடையில் இருந்த சிகரெட் பாக்கெட்டுகள், கல்லாப்பெட்டியில் இருந்த சில்லரை காசுகள் என, 5,000 ரூபாய் மதிப்பில் திருடுபோனது தெரிந்தது.
அதேபோல் அருகே உள்ள கோவிந்தன், சக்திவேல் பெட்டிக்கடைகள், வசந்த் என்பவரது சலுான் கடையிலும், பூட்டுகள் உடைக்கப்பட்டு, சில்லரை காசுகள் திருடப்பட்டுள்ளன.
மேலும் வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷன் எதிரே மாரியம்மன் கோவில் அருகே, முத்தம்பட்டி சேர்ந்த அறிவுக்கரசி, 55, நடத்தும் பெட்டிக்கடையில் சிகரெட் பெட்டிகள், காசுகள் உள்பட, 3,000 ரூபாய் மதிப்பில் திருடுபோனது. வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.