/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் உபரிநீரால் ஒரு வாரத்தில் நிரம்பியது 9 ஏரிகள்தான்! நீரேற்று நிலையத்தை முழுவீச்சில் இயக்க வலியுறுத்தல்
/
மேட்டூர் உபரிநீரால் ஒரு வாரத்தில் நிரம்பியது 9 ஏரிகள்தான்! நீரேற்று நிலையத்தை முழுவீச்சில் இயக்க வலியுறுத்தல்
மேட்டூர் உபரிநீரால் ஒரு வாரத்தில் நிரம்பியது 9 ஏரிகள்தான்! நீரேற்று நிலையத்தை முழுவீச்சில் இயக்க வலியுறுத்தல்
மேட்டூர் உபரிநீரால் ஒரு வாரத்தில் நிரம்பியது 9 ஏரிகள்தான்! நீரேற்று நிலையத்தை முழுவீச்சில் இயக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 07, 2024 01:06 AM
சேலம்,:மேட்டூர் அணை உபரிநீரால் ஒரு வாரத்தில், 9 ஏரிகள் மட்டுமே நிரம்பியது. இதனால் நீரேற்று நிலையத்தை முழுவீச்சில் இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான, 120 அடியை எட்டியதும், உபரிநீரின் ஒரு பகுதி, கடந்த, 31 முதல், திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்தில் இருந்து மின்மோட்டார் உதவியுடன் ஏரிகளில் நிரப்பப்படுகிறது.
இதில் அணை நீர்மட்டத்தில் இருந்து, 138.5 மீ., உயரத்தில் உள்ள காளிப்பட்டி தொகுப்புக்கு உட்பட்ட, 6 ஏரிகள் நிரம்பின. அதன்படி கோனுாரில் உள்ள செக்கானேரியில், 2.87 மி.கன அடி நீர், பொட்டனேரியில் உள்ள காட்டூர் ஏரியில், 1.2, காளிப்பட்டி கிராமத்தில் உள்ள எம்.காளிப்பட்டி ஏரியில், 0.9, ராயப்பன் ஏரியில், 5.07, பானாபுரம் கிராமத்தில் உள்ள சின்னேரியில், 0.9, மானாத்தாள் ஏரியில், 24.33 மி.கன அடி நீர் நிரம்பி உள்ளன.
அதேபோல், 124 மீ., உயரத்தில் உள்ள நங்கவள்ளி தொகுப்புக்கு உட்பட்ட, 3 ஏரிகள் நிரம்பி உள்ளன. அதன்படி நங்கவள்ளி ஏரியில், 1.3 மி.கனஅடி நீர், வனவாசி ஏரியில், 3.65, வீரக்கல்புதுாரில் உள்ள கொத்திக்குட்டை ஏரியில், 0.7 மி.கனஅடி நீர் நிரம்பி உள்ளன. அணை திறக்கப்பட்டு நேற்றுடன் ஒரு வாரமான நிலையில் இதுவரை, 9 ஏரிகள் மட்டும் நிரம்பி உள்ளன.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து, 26,000 கன அடியாக குறைந்த நிலையில், அவை அப்படியே வெளியேற்றப்பட்டு வருகின்றன. நீர்வரத்து படிப்படியாக குறைந்தால், வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்து பின் உபரிநீர் வெளியேற்றுவதும் நிறுத்தப்பட்டு ஏரிகளை நிரப்புவது தடைபடும். அதனால் திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள, 940 குதிரைத்திறன் கொண்ட, 10 மின் மோட்டார்களையும் இயக்கி, முதல் கட்டமாக, 26 ஏரிகளிலாவது உபரிநீரை நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் வலியுறுத்தினர்.
8 ஏரிகளுக்கு சிக்கல்
ஜலகண்டாபுரத்துக்கு உட்பட்ட ஆவடத்துார், சூரப்பள்ளி கிராமம் வழியே உபரிநீர் கொண்டு செல்வதற்கான கால்வாய் அமைக்க, இன்னும் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. இதனால் கோட்டைமேடு வைத்தியம் குட்டை, ஜலகண்டாபுரம், மேட்டுப்பட்டி, ஆச்சம்பட்டி, சித்துார், அம்மாபாளையம், பில்லுக்குறிச்சி, ரெட்டிப்பட்டி ஆகிய ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்வது கேள்விக்குறியாக உள்ளது.