/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கல்லுாரி மாணவியருக்கு சுற்றுலா அனுமதியின்றி சென்றதால் சர்ச்சை
/
கல்லுாரி மாணவியருக்கு சுற்றுலா அனுமதியின்றி சென்றதால் சர்ச்சை
கல்லுாரி மாணவியருக்கு சுற்றுலா அனுமதியின்றி சென்றதால் சர்ச்சை
கல்லுாரி மாணவியருக்கு சுற்றுலா அனுமதியின்றி சென்றதால் சர்ச்சை
ADDED : செப் 12, 2024 12:50 AM
ஆத்துார்:அரசு கல்லுாரி அனுமதியின்றி, கள பயிற்சிக்கு, மாணவியர் உள்பட, 14 பேரை, கவுரவ விரிவுரையாளர்கள் அழைத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அனுமதி
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே வட சென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி, தாவரவியல் பிரிவு, 3ம் ஆண்டில், 64 மாணவ, மாணவியர் உள்ளனர். அவர்கள், கடந்த ஆக., 27 முதல், 31 வரை, வேளாண், தோட்டக்கலை தொடர்பாக தொழில்முனைவோர் கள பயிற்சி செல்வதற்கு, மண்டல கல்லுாரி கல்வி இயக்குனர் மூலம் அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, 50 பேர், ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்துக்கு சென்று வந்தனர். மீதி, 14 பேர், கோவை வேளாண் பல்கலை, ஊட்டி தாவரவியல் பூங்கா செல்வதாக கூறினர். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
விரிவுரையாளர்கள்
ஆனால் கடந்த, 9ம் தேதி இரவு, 9:00 மணிக்கு மேல், கல்லுாரியில் இருந்து கவுரவ விரிவுரையாளர்கள் மணிகண்டன், சுபாஷ் ஆகியோர், 5 மாணவி, 9 மாணவர்களை, வேளாண் பல்கலைக்கு, கள பயிற்சிக்கு வேனில் அழைத்துச் சென்றனர். இதில் இரு மாணவியர் மாயமானதாக தகவல் வெளியானது.
இதையறிந்து மாணவ, மாணவியரின் பெற்றோர், மொபைல் போனில் தொடர்பு கொண்டு, கல்லுாரி முதல்வர், பேராசிரியர்களிடம் பேசினர்.
அப்போது, 'அனுமதி பெறாமல் கள பயிற்சிக்கு அனுப்பியது ஏன்; மாணவியர் செல்லும் நிலையில் பெண் விரிவுரையாளர் அல்லது பெண் அலுவலரை ஏன் அனுப்பவில்லை... எங்கள் பிள்ளைகளை பாதுகாப்புடன் அழைத்து வர வேண்டும்' என தெரிவித்தனர்.
விசாரணை
மேலும் கோவை சென்ற மாணவியுடன், 'பாதுகாப்பாக உள்ளீர்களா' என, பெற்றோர் கேட்கும் வீடியோ, வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுதொடர்பாக ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது:
கோவை, ஊட்டி செல்வதாக கூறிய, 14 பேருக்கு, மண்டல கல்லுாரி கல்வி இயக்குனரகம் அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்த தகவல், துறைத்தலைவர் குமரேசன் மூலம் கவுரவ விரிவுரையாளர் மணிகண்டன், சுபாஷுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள், மாணவ, மாணவியரை அழைத்துச்சென்றுள்ளனர்.
இதுவரை கவுரவ விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியர் கல்லுாரிக்கு வராததால், 'ஆப்சென்ட்' போடப்பட்டுள்ளது. அவர்கள் திரும்பி வந்தால் தான், கள பயிற்சிக்கு சென்ற விபரம் தெரியவரும். பெற்றோர் வீடியோ வெளியிட்டதால் போலீசார் விசாரித்தனர்.
இதுதொடர்பாக, கல்லுாரி கல்வி இயக்குனருக்கும் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இரு மாணவியர் மாயம் என்பது தவறான தகவல்.