/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேகரிக்கப்படும் குடிநீரால் டெங்கு கொசு அபாயம்
/
சேகரிக்கப்படும் குடிநீரால் டெங்கு கொசு அபாயம்
ADDED : மே 01, 2024 08:36 PM
சேலம்:சேலத்தில் கடந்த சில நாட்களாக, கோடை வெயிலின் தாக்கத்தால், அனல்காற்று வீசுகிறது. இதனால், குடிநீர் தேவை இரு மடங்காக அதிகரித்துள்ளது. சேலம் மாநகராட்சியில், மேட்டூர் தொட்டில்பட்டியிலிருந்து தனிக்குடிநீர் திட்டம் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை, 3 நாள் முதல், 5 நாட்களுக்குள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
குடிநீர் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதால், பல இடங்களில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், குடிநீர் வினியோகமும், 5 நாட்கள் முதல், 10 நாட்களுக்கு ஒரு முறை என வினியோக சுழற்சி அதிகரித்துள்ளது.
இதனால், பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பவர்கள் பாத்திரங்கள், டிரம், என சேகரித்து வைத்து குடிப்பதால், அவற்றில் டெங்கு கொசு புழு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி சுகாதார அலுவலர் ஒருவர் கூறுகையில், “குடிநீரை தேவைக்கேற்ப சேகரித்து வைக்கவும், மூடி பாதுகாப்பாக வைப்பதும் அவசியம். டெங்கு கொசுப்புழு உருவாவதை வீடு வீடாக கண்காணிக்கவும், அவற்றை அழிக்கவும், 400 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

